கொல்லப்பட்ட இளைஞர் மனோஜ். 
க்ரைம்

காரைக்குடி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்த இளைஞர் வெட்டிக் கொலை!

இ.ஜெகநாதன்

காரைக்குடி: காரைக்குடி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்த இளைஞரை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.

ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடந்தவிருந்த 124 கிலோ கஞ்சாவை கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே பதுக்கி வைத்தது தொடர்பாக காரைக்குடி சேர்வார் ஊருணியை சேர்ந்தவர் மனோஜ் (23) உள்ளிட்டோரை குன்றக்குடி போலீஸார் கைது செய்தனர். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த மனோஜ் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இன்று காலை 10 மணிக்கு காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு 2 இருசக்கர வாகனங்களில் நண்பர்கள் சபீக், கார்த்திக் ஆகியோருடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். டி.டி.நகர் 5-வது வீதியில் சென்றபோது, பின்புறம் காரில் வந்த ஒரு கும்பல், அவர்களது இரு சக்கர வாகனங்களை இடித்து தள்ளியது. இதில் நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்தார். பின்னர் எழுந்து, 100 அடி சாலையில் ஓடினர். காரில் இருந்து இறங்கிய அந்த கும்பல், மூவரையும் வெட்டியது. இதில் மனோஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த சபீக், கார்த்திக் ஆகியோரை காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்தில் டிஎஸ்பிகள் பார்த்திபன், கவுதமன் மற்றும் காரைக்குடி வடக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT