டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ‘பணம் குவித்த’ விவகாரம்: உள் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ இல்லத்தில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து உள் விசாரணையைத் தொடங்க உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 21) ஒருமனதாக ஒப்புக்கொண்டது. மேலும், அவரை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மார்ச் 14 அன்று ஹோலி பண்டிகையின்போது நீதிபதியின் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிபதியின் வீட்டுக்குச் சென்ற ​​தீயணைப்பு வீரர்கள், வீட்டில் அதிக அளவில் பணம் இருப்பது குறித்து காவல் துறைக்கு தெரிவித்தனர். தீ விபத்தின்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இல்லை. அவரது குடும்பத்தினர்தான் தீயணைப்புத் துறையை அழைத்துள்ளனர்.

உயர் நீதிமன்ற நீதிபதி என்பதால், காவல் துறை இதனை அரசுக்குத் தெரிவித்துள்ளது. அரசு துறைகள் வழியாக இந்த விவகாரம் இந்திய தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் இன்று காலையில் கூடினர். இதனால், வழக்கமான நீதிமன்ற நேரங்களில் கூடும் உச்ச நீதிமன்றத்தின் 12 அமர்வுகள் இன்று கூடவில்லை.

இடமாற்றத்துக்கு பரிந்துரை: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது, அவரை மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், நீதிபதிக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு உள் விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "நீதித் துறைக்குள் ஊழல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது” என்று கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "நீதித் துறைக்குள் ஊழல் பிரச்சினை மிகவும் தீவிரமான ஒன்று. இது முதல் முறையாக வெளியாகி இருக்கும் ஒன்றல்ல. பல ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. நீதிபதிகள் நியமனம் குறித்த செயல்முறை எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கவனிக்கத் தொடங்க வேண்டிய நேரம் இது. நியமன செயல்முறை மிகவும் வெளிப்படையாகவும் கவனமாகவும் செய்யப்பட வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in