கரூர்: வாகன சோதனையில் ஆயுதங்களுடன் பிடிப்பட்ட இரு வேறு கட்சி நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் போலீஸார் இன்று தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக கரூர் சுங்கவாயில் பகுதியில் டிஎஸ்பி செல்வராஜ், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வாகனத்தில பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வாள் இருந்தது. விசாரணையில், அவர் கருப்பகவுண்டன்புதூர் கிழக்கு பகுதியை சேர்ந்த, அகில பாரத மக்கள் கட்சி கரூர் மாவட்ட தலைவர் யுவராஜ் (38) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை அழைத்து சென்று அவர் வீட்டில் சோதனையிட்டபோது தலா 2 அரிவாள், சூரிக்கத்தி, வாள், 1 நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றை கைப்பற்றி, தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர் மீது கரூர் நகர காவல் நிலையம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. புலியூர் முடக்குச்சாலையில் நடந்த தீவிர வாகன சோதனையில் அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அவ்வாகனத்தில் பட்டா கத்தி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. விசாரணையில் அவர் புலியூர் பி.வெள்ளாளப்பட்டியை சேர்ந்த அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மற்ம் வீரபறையர் பேரவை நிறுவனர் ரவிச்சந்திரன் (50) எனு தெரியவந்தது.
இதையடுத்து அவரை அழைத்து சென்று அவர் வீட்டில் சோதனையிட்டபோது தலா ஒரு பட்டாகத்தி, வீச்சருவாள், நாட்டுத்துப்பாக்கி, மான் கொம்பு, வாட்ச், செய்தியாளர் அட்டை, பத்திரிகையாளர் நல வாரிய அடையாள அட்டை, சூரக்கத்தி 5 ஆகியவற்றை கைப்பற்றி பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்டம், மதுரை மாநகரம் தல்லாகுளம், திருச்சி - உறையூர் காவல் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து பொது அமைதியை சீர்குலைக்கும் நபர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடு கின்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா எச்சரித்துள்ளார்.