Published : 11 Jan 2025 06:01 PM
Last Updated : 11 Jan 2025 06:01 PM

வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்களை தரிசிக்கவிடாமல் அதிகார துஷ்பிரயோகம்: இந்து முன்னணி குற்றச்சாட்டு

சென்னை: வைகுண்ட ஏகாதசியன்று கோயில்களில் பக்தர்களை தரிசிக்கவிடாமல் ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கும் வைபவத்தின் போது பக்தர்களை தரிசிக்க விடாமல் ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் பெரும்பான்மையாக ஆக்கிரமித்துள்ளனர். இத்தகைய போக்கு பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. சில பக்தர்கள் மன வேதனையுடன் ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒருபுறம் நாத்திகம் என்ற பெயரில் இந்து நம்பிக்கையை கொச்சைப்படுத்தி பேசியும், வேற்று மத நம்பிக்கையை உயர்த்தி பிடிப்பவராகவும் இருந்து கொண்டிருக்கும் இந்த திராவிட மாடல் அரசியல்வாதிகள், கோவில் விழாக்களில் முன்னிலையில் நின்று பக்தர்களை அவமதிக்கின்றனர்.

கோயில் விழாக்களுக்கு முன்னிலையில் நிற்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளில் யாராவது ஒருவராவது அதே கோயிலில் திருட்டு நடக்கும்போதும், கோயில் நம்பிக்கைக்கு அவமதிப்பு ஏற்படும் போதும் முன்வந்து போராட வருகிறார்களா? பரிவட்டம் கட்டி தங்கள் செல்வாக்கை காட்டிக் கொள்ளவும், தற்பெருமைக்கும் தான் கோயிலுக்கு வருகிறார்கள் என்பதே உண்மை.

இது வைகுண்ட ஏகாதசியன்று மட்டும் நடக்கும் சம்பவமல்ல. திருவண்ணாமலை தீபம், தைப்பூசம், ஆடிப்பூரம், வைகாசி விசாகம், சித்திரை திருவிழா என்று தமிழகத்தின் எந்த ஆன்மீக, கோயில் விழாவாக இருந்தாலும் இந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் அரங்கேறுகிறது. இத்தகைய சுயநலவாதிகள் மனிதர்களாகவே மதிக்க தக்கவர்கள் இல்லை என்பதே மக்களின் கருத்தாகும்.

இதுவே மற்ற மாநிலங்களில் இத்தகைய விஐபி கலாச்சாரம் பெரிதாக இருப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம். எத்தனை ஆயிரம் பக்தர்கள் தரிசிக்க தக்க நடவடிக்கையை எடுக்கிறார்கள். அதிலும் சில அசம்பாவிதங்களிலும் நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே வருங்காலத்தில் கோயிலில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் பக்தர்களுக்கு முன்னுரிமையும் அனைவரும் இறைவனை தரிசிக்க தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் செய்ய வேண்டும்.

எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், மற்றும் அவர்கள் தம் குடும்பத்தாருக்கு முன்னுரிமை கொடுத்து விட்டு, பக்தர்களை அவமதிக்க கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x