குன்னூர்: குன்னூர் மலைப் பாதையில், நிலவும் கடும் மேக மூட்டம் காரணமாக அடுத்தடுத்து 3 வாகனங்கள் விபத்தில் சிக்கின.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் தமிழத்தில் வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திலும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூரில் கடந்த 2 நாட்களாக கனமழையுடன் கடும் மேகமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மலைப்பாதையில் வாகனங்களை இயக்கி வருகின்றனர். ஆனால் தற்போது எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடுமையான மேகமூட்டம் நிலவி வருகிறது.
இதனிடையே காட்டேரி பூங்கா அருகே அதி வேகத்தில் வந்த கார், லாரியை முந்தி செல்லும்போது எதிரே வந்த லாரியின் மீது மோதியது. தொடர்ந்து விபத்துக்கு உள்ளான இந்த கார், பைக் மீது மோதி சாலையில் நின்றது. இதில் பைக்கில் வந்த நபர் காயமடைந்தார். கார் ஓட்டுநர் ஹென்றி என்பவர் மது போதையில் இருந்ததாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
பைக்கில் வந்தவருக்கு முதலுதவி அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் மலை பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு கிரேன் உதவியுடன் வாகனங்கள் மீட்க பட்டு சாலை சீரானது. ஒரே இடத்தில் 3 வாகனங்கள் மேகமூட்டம் காரணமாக விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.