சென்னை: தீபாவளி தினமான நேற்று முன்தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்வுகளில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 13 பேர் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
தேனி பங்களாமேட்டில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார் (57). பழனிசெட்டிபட்டி காவல்நிலைய எஸ்ஐ.யான இவர், மாற்று பணியாக டிஎஸ்பி. அலுவலகத்தில் பணிபுரிந்தார். தீபாவளியன்று பணி முடித்துவிட்டு இரவு 10.30 மணிக்கு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
வழியில் சமதர்மபுரம் பிரதான சாலையில் மதுபோதையில் சில இளைஞர்கள் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை தொடர்ந்து வெடித்து, அதனை ரீல்ஸ்களாக எடுத்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அவ்வழியே சென்ற செந்தில்குமார், இளைஞர்களை கண்டித்துள்ளார். சீருடையில் இல்லாததால், அவர் கூறியதை இளைஞர்கள் கண்டுகொள்ளவில்லை. உடனே செந்தில்குமார், கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவர்களின் செயல்பாடுகளை வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் செந்தில்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் நிலைகுலைந்து மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே செந்தில்குமார் உயிரிழந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக சென்னை போரூரைச் சேர்ந்த மகேஸ்வரன் (22), தேனி சிவராம் நகரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் சூரியமூர்த்தி (24), சமதர்மபுரத்தைச் சேர்ந்த தீபன்ராஜ் (20), பரத்பிரனேஷ் (21), ஆகாஷ் (23), கவுதம் (22) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். எஸ்.எஸ்.ஐ.யின் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிறப்பு எஸ்ஐ செந்தில் குமாரின் உயிரிழப்பு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரின் குடும்பத்தினருக்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
திருச்சியில் 3 பேர்: திருச்சி மாவட்டம் இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மகன் விஷால் (17). இவரது பெரியப்பா மகன் ராகுல் (17). பெற்றோரை இழந்த ராகுல், தனது சித்தப்பா ராஜாவின் வீட்டில் வசித்து வந்தார். இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் பகுதிக்கு சென்ற இருவரையும் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டது. கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு 3 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த சிறுவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
ஐடி ஊழியர்: திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த புறத்தாக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (21). சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு வந்திருந்தார், நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்.
அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த டொனால்ட்(28) என்பவருக்கும், கிறிஸ்டோபருக்கும் பட்டாசு வெடித்தது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டொனால்ட், தனது இருசக்கர வாகனத்தில் இருந்த ஸ்பேனரை எடுத்து கிறிஸ்டோபரின் நெஞ்சில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில், கிறிஸ்டோபர் உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கூலித்தொழிலாளி: பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி (50), தீபாவளியன்று இரவு அங்குள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் (35) மற்றும் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். அவர்களை ரவி கண்டித்துள்ளார். நள்ளிரவில் கோயில் வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரவியை அருள்ராஜ் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கிவிட்டு தப்பிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த ரவி உயிரிழந்தார். அருள்ராஜை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ரவுடி சுட்டுப் பிடிப்பு: கடலூர் வட்டம் பெரிய காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவுடி பிருத்விராஜன் (26). இவர் நேற்று முன்தினம் இரவு அருளரசன் (29) என்பவருடன் மது குடித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து அருளரசன் தனது அண்ணன் அன்பரசனுடன் வந்து பிருத்விராஜனை தாக்கினர்.
பீர் பாட்டிலாலும் கத்தியாலும் குத்தி விட்டு தப்பிவிட்டனர். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் பிருத்விராஜன் உயிரிழந்தார். ரெட்டிச்சாவடி அருகே முந்திரிக்காட்டில் பதுங்கியிருந்த அன்பரசன் போலீஸாரிடம் பிடிபட்டார். சோதனைச்சாவடி வழியாக அருளரசன் இருசக்கர வாகனத்தில் செல்வதை பார்த்த கடலூர் புதுநகர் போலீஸார் அவரை விரட்டிச் சென்றனர். உதவி ஆய்வாளர் முகிலரசுவை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற அருளரசனை காவல் ஆய்வாளர் இளவரசி துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்.
சொத்து தகராறில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (70). இவரது சகோதரர் சக்திவேல் (67). இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. தீபாவளியன்று, நின்னையூர் பாலம் அருகே மது குடித்துக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியனிடம் சக்திவேல் மகன் தணிகைவேல் (35), சொத்து பிரச்சினை குறித்து பேசியதாகவும், அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது தணிகைவேல் தள்ளிவிட்டதில் கீழேவிழுந்த பாலசுப்ரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். தியாகதுருகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தணிகைவேலை கைது செய்தனர்.
ஆட்டோ ஓட்டுநர்: சென்னை வியாசர்பாடி சத்தி மூர்த்தி நகரை சேர்ந்தவர் தனுஷ் (19). ஆட்டோ ஓட்டுநர். இவரது அண்ணன் சிலம்பரசன், தீபாவளியன்று இரவு 10 மணியளவில் சத்திய மூர்த்தி நகர் 58-வது பிளாக் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த அப்புக்குட்டி என்பவர், சிலம்பரசனிடம் தகராறு செய்துள்ளார்.
இதுபற்றி கேள்விப்பட்டதும், தனுஷ் அங்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது, அப்புக்குட்டி, அவரது தந்தை பொய்யாது மற்றும் கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து தனுஷை தாக்கி அரிவாளால் வெட்டி உள்ளனர். படுகாயத்துடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனுஷ், சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
தலையில் கல்லை போட்டு: காஞ்சிபுரம் மாநகராட்சி 21-வது வார்டு அரியந்த் அவென்யூ அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை மற்றும் கண் பகுதிகளில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஆண் ஒருவர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் மற்றும் அரக்கோணம் ரயில்வே போலீஸார் விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் திருக்காலிமேடு அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன்(32) என்பது தெரியவந்தது. தீபாவளி தினத்தன்று ரயில்வே தண்டவாளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
காரைக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கச்சாமி என்ற நவீன் (26). சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இருந்த இவர், சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார். தீபாவளியன்று இரவு நண்பர்களுடன் காட்டுப் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த நவீனை காரில் வந்த கும்பல் கொலை செய்து விட்டு தப்பியது. இதுதொடர்பாக 7 பேரை கல்லல் போலீஸார் கைது செய்தனர்.
மானாமதுரை அருகே வேலூர் முருகபாஞ்சானைச் சேர்ந்த விக்னேஷ் (24). இவர் மீது சில வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கும்பல் விக்னேஷை வெட்டிக் கொலை செய்தது. சிப்காட் போலீஸார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அஜீத்குமார்(28). இவர் சுவேதா (26) என்ற பெண்ணை காதலித்து ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்தார். நேற்று அதிகாலை குடும்பத் தகராறில் சுவேதாவை கழுத்தை அறுத்து கொலை செய்த அஜீத்குமார், பின்னர் எரியோடு போலீஸில் சரண் அடைந்தார்.
விருதுநகர் பாலவனத்தம் அருகிலுள்ள வடக்குப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி அன்புச்செல்வம் (25), ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நேற்று முன்தினம் நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது போதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 14 வயது சிறுவன் உட்பட 6 பேரை அருப்புக்கோட்டை போலீஸார் கைது செய்தனர்.