கவியரசன்
கும்பகோணம்/தஞ்சாவூர்: கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரத்தில் பிளஸ் 1 மாணவர்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்து, மூளைச்சாவு அடைந்த பிளஸ் 2 மாணவர் நேற்று உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் இனாம் கிளியூரைச் சேர்ந்த குணசேகரன் மகன் கவியரசன்(17).
இவர், கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்தப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், 20 நாட்களுக்கு முன் கழிப்பறைக்கு சென்று வரும் போது இருதரப்பு மாணவர் களுக்கும் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பள்ளி நிர்வாகம் மாணவர்களை கண்டித்ததுடன், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பியது.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பும்போது, பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், பலத்த காயமடைந்த கவியரசனை, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுதொடர்பாக கவியரசன் தந்தை அளித்த புகாரின்பேரில் பட்டீஸ்வரம் போலீஸார் பிளஸ் 1 மாணவர்கள் 15 பேரை கைது செய்து, தஞ்சை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இதற்கிடையே, கவியரசன் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்ததால், அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, அசம்பாவிதங்கள் ஏதும் நேரிடாதவாறு பள்ளி, இனாம்கிளியூர் மற்றும் பட்டீஸ்வரம், முழையூர், தேன்படுகை, கடைத்தெரு உள்ளிட்டபகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கவியரசனின் நண்பர் கோபி கூறியதாவது: கடந்த 4-ம் தேதி மாலை பள்ளி முடிந்து கவியரசனுடன் சேர்ந்து பிளஸ் 2 மாணவர்கள் 6 பேர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தோம்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வந்தபோது, அங்கிருந்த பிளஸ் 1 மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் எங்களிடம் சண்டை போடலாமா என கேட்டதுடன், எங்கள் பெற்றோரை தரக்குறைவாகப் பேசினர். இதை கவியரசன் தட்டிக்கேட்டார். பின்னர் அங்கிருந்து நகர்ந்தபோது, அவர்கள் பின்னால் வந்து எங்களைத் தாக்கினர்.
கவியரசனை சுற்றி வளைத்து ரீப்பர் கட்டையால் சரமாரியாக தாக்கியதால், அவருக்கு வலிப்பு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு கீழே விழுந்தார். ஆனால், கவியரசனை தூக்கி நிறுத்திய அவர்கள், நடிக்கிறியா என்று கேட்டு மீண்டும் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த கவியரசன் அங்கேயே விழுந்ததால், அனைவரும் ஓடிவிட்டனர்” என்றார். 7 பிரிவுகளில் வழக்கு இக்கொலை தொடர்பாக 7 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உயிரிழப்பு சம்பவத்தை அடுத்து நேற்று காலை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குவிந்தனர். அப்போது, கவியரசனை தாக்கியதில் 15 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 10 பேரையும் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ரூ.50 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்றும், ஆட்சியர் வந்தால் தான் உடலை பெறுவோம் என்றும் கூறினர். இதையடுத்து, அவர்கள் ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து, உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.