சென்னை: சென்னை ஏழுகிணறு பகுதியில் சட்டவிரோதமாக ஓபியம் எனும் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3.5 கிலோ எடை கொண்ட ஓபியம் மற்றும் பணம் ரூ.1,80,000 ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறை வெளியிட்ட தகவல்: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீஸார் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, ஏழுகிணறு (C-3)காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், இன்று (மே 8) காலை, ஏழுகிணறு, அம்மன் கோயில் தெரு மற்றும் கிருஷ்ணப்பா குளம் தெரு சந்திப்பு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 நபர்களை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, பையில் ஓபியம் (Opium) என்ற போதைப் பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், சட்டவிரோதமாக போதைப் பொருள் வைத்திருந்த தேவராம் (35), ஹாதிராம் (31), ஹர்தேவ்ராம் (43), ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3.5 கிலோ எடை கொண்ட ஓபியம் எனும் போதைப் பொருள் மற்றும் பணம் ரூ.1,80,000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர், என்று அதில் தெரிவிக்ப்பட்டுள்ளது.