சென்னை | எல்எஸ்டி போதை பொருள் கடத்தல் வழக்கு: 2 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை

சென்னை | எல்எஸ்டி போதை பொருள் கடத்தல் வழக்கு: 2 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை

Published on

சென்னை: எல்எஸ்டி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான 2 பேருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 பிப்.14-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலை பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்ததகவலின்பேரில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சவுகார்பேட்டை முருகப்பன் தெருவைச் சேர்ந்த மெஹூல் பாப்னா (22) என்பவரிடம் ஒரு பாலீதீன் கவரை வழங்கி விட்டு தப்பினார். மெஹூல் பாப்னாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தப்பியவர் சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த அகில் அகமது (22) என்பது தெரியவந்தது.

மெஹூல் பாப்னா வைத்திருந்த கவரில் சோதனையிட்டபோது 1.83 கிராம் எடையுள்ள 91 எல்எஸ்டி என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி. திருமகள் முன்பாக நடந்து வந்தது.

மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் என்.பி.குமார், செல்லத்துரை ஆகியோர் ஆஜராகி குற்றம் சாட்டப்பட்ட அகில் அகமது ஏற்கெனவே கடந்த 2019-ம்ஆண்டு மற்றொரு கஞ்சா வழக்கில் கைதானவர் என வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதி, எல்எஸ்டி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் அரசு தரப்பில் சரிவர நிரூபிக் கப்பட்டுள்ளது எனக்கூறி இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 1.70 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in