பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு - வெள்ளகோவில் அருகே சோகம்

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வெள்ளகோவில் கிழக்கு உப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மகன் கோகுல் (8). அதே ஊரை சேர்ந்த மற்றொரு சுமை தூக்கும் தொழிலாளி ஜெயக்குமார். இவரது மகன் அஸ்வின் (8). இருவரும் நண்பர்கள். கோகுலும், அஸ்வினும் உப்புப்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தனர். பள்ளி கோடை விடுமுறை என்பதால், பெற்றோர்கள் வேலைக்கு சென்றுவிட இன்று 2 பேரும் வீட்டில் இருந்துள்ளனர்.

மாலையில் வந்து பார்த்த போது இருவரையும் காணவில்லை. தேடிப் பார்த்த போது வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்து கிணற்றின் அருகில் சிறுவர்களின் இரண்டு மிதிவண்டிகள் மற்றும் உடைகள் கிடந்தன. வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் முழுவதும் நிரம்பியிருக்கும் அந்த 40 அடி ஆழ கிணற்றில் இறங்கி தேடினர்.

அதில் கோகுல், அஷ்வின் இரண்டு சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன. கிணற்றுக்கு அருகில் விளையாடச் சென்ற சிறுவர்கள் குளிக்கும் ஆசையில் கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிகிறது. வெள்ளகோவில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT