சென்னை பர்மா பஜார் கடைகளில் இருந்து இ-சிகரெட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
க்ரைம்

சென்னையில் தடை செய்யப்பட்ட 1,312 இ-சிகரெட்டுகள் பறிமுதல்: 6 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பர்மா பஜாரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டுகளை விற்பனை செய்த 6 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து, 1,312 இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் ரகசியமாக கண்காணித்தும், சிறப்பு சோதனைகள் மேற்கொண்டும், இ-சிகரெட் (Electronic Cigarette) விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, வடக்கு கடற்கரை காவல் நிலைய ( B-1) ஆய்வாளர் தலைமையிலான போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கடந்த மார்ச் 9ம் தேதி அன்று அண்ணாநகர் பகுதியிலுள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு இ-சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த முகமது ஆஷிக் (31), அப்துல் (20), ஆகிய இருவரை கைது செய்தனர்.

மேலும், வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் நேற்று (மார்ச் 10) பாரிமுனை, பர்மா பஜார் பகுதியிலுள்ள கடைகளை கண்காணித்து, 3 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு இ-சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த யாஷ்மின் ராஜா(35)அப்துல் கரீம் (25), அப்துல்லா (34), சையது அபுதாகீர் (36), ஆகிய 4 நபர்களை கைது செய்தனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட 6 நபர்களிடமிருந்து, மொத்தம் 1,312 வெளிநாட்டு இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கைது செய்யப்பட்ட 6 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட், குட்கா, மாவா புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT