மதுரை: மதுரையில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற பாஜக நிர்வாகியை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மதுரை மாநகர் பிபி.குளம் முத்துராமலிங்கத்தேவர் தெருப் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். சமீபத்தில் மதுரை மாநகர பாஜக இளைஞரணி மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இவர், வெள்ளிக்கிழமை மதுரை உலக தமிழ்ச்சங்கம் பகுதியில் வாளுடன் நின்றதாக தெரிகிறது. அவ்வழியாக ரோந்து சென்ற தல்லாகுளம் போலீஸார் ஸ்ரீகாந்தை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடும் நோக்கில் நின்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து வாள் ஒன்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்டது தொடர்பாக இவர் மீது ஏற்கெனவே சர்ச்சை இருந்து வந்தது. மேலும், மதுரை ஆஸ்டின்பட்டி, திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் , தல்லாகுளம் காவல் நிலையங்களில் இவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சில நாளுக்கு முன்பு கட்சியில் பதவி பெற்ற இவர் ஆயுதத்தைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்று, கைதானது மதுரை பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.