கோவை காந்திபுரம் நூறடி சாலையில் திருட்டு சம்பவம் நடந்த நகைக்கடையில் விசாரணை நடத்தும் காவல்துறையினர் | படங்கள் : ஜெ.மனோகரன். 
க்ரைம்

கோவையில் பிரபல நகைக்கடையில் 200 பவுன் நகைகள் கொள்ளை: 5 தனிப்படை தீவிர விசாரணை

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை நூறடி சாலையில் உள்ள நகைக்கடையில், ஏ.சி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர், கடையில் இருந்த 200 பவுன் நகையை கொள்ளை அடித்துச் சென்ற சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.

நகை சரிபார்ப்பு பணி: கோவை காந்திபுரம் நூறடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல நகைக்கடை உள்ளது. இக்கடை தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கொண்டதாகும். தரைத்தளம் முதல் 2-ம் தளம் வரை தங்க, வைர, வெள்ளி நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 3-ம் தளத்தில் ஊழியர்கள் தங்கும் அறைகள் உள்ளன. இங்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு தினமும் கடையை மூடுவதற்கு முன்னரும், காலை கடையை திறந்து வியாபாரத்தை தொடங்குவதற்கு முன்னரும் நகைகளின் இருப்பை ஊழியர்கள் சரிபார்ப்பது வழக்கம்.

200 பவுன் திருட்டு: அதன்படி, நேற்று (நவ.27) இரவு ஊழியர்கள் நகைகளின் இருப்பை சரிபார்த்துவிட்டு, கடையை பூட்டிச் சென்றனர். பின்னர், வழக்கம் போல் ஊழியர்கள் இன்று (நவ.28) காலை வந்து, நகைகளின் இருப்பை சரிபார்த்தனர். அப்போது பல்வேறு ரேக்குகளில் நகைகளின் இருப்பு குறைந்திருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் நகைக்கடை மேலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து பார்த்த போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 200 பவுன் அளவுக்கு நகைகள் மாயமாகியிருப்பதும், அதை மர்மநபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

காவல் துறையினர் விசாரணை : இதுகுறித்து தகவல் அறிந்த காட்டூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். துப்பறியும் மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை பிரிவினர் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், துணை ஆணையர்கள் சந்தீஷ், சண்முகம் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். நகைக்கடை முழுவதும் சோதனை நடத்தினர்.

ஏ.சி வெண்டிலேட்டர் வழியே... - அப்போது, கடையின் வெளிப்பக்கத்தில் இருந்து ஏ.சி வெண்டிலேட்டர் வழித்தடம் மீது ஒட்டப்பட்டிருந்த தடுப்புகள் உடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அந்த வழியாக மர்மநபர் உள்ளே நுழைந்ததை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் மர்நபர் ஒருவர் கடை வளாகத்தின் வாகனம் நிறுத்துமிடம் பகுதி வழியாக காவலாளிக்கு தெரியாமல் உள்ளே நுழைந்து, அங்கிருந்த கம்பி வழியாக மேலே சென்று, ஏ.சி.வெண்டிலேட்டர் தடுப்பை உடைத்து உள்ளே நுழைந்து, கடைக்குள் நுழைந்ததும், ரேக்குகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளை திருடியதும் தெரியவந்தது.



ஒருவர் மட்டுமே பதிவு : இரு கைகளிலும் கையுறை அணிந்து, முகத்தை மறைத்து முகக்கவசம் அணிந்து கொண்டு அந்த மர்மநபர் கடைக்குள் நுழைந்துள்ளார். நகைகளை திருடிய பின்னர், மீண்டும் அதே ஏசி வெண்டிலேட்டர் வழித்தடம் வழியாக வெளியே சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. சிசிடிவி காட்சிகளில் ஒருவர் மட்டுமே பதிவாகியுள்ளார். ஆனால், இச்சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

ஊழியர்களிடம் விசாரணை: ஏசி வெண்டிலேட்டரை சரியாக கண்டறிந்து சென்றதால், இக்கடை குறித்து அறிமுகம் உள்ள தெரிந்த நபர்கள் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இன்று அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் இச்சம்பவம் நடத்திருக்கலாம் எனத் தெரிகிறது. நகைக்கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள், கடை பாதுகாவலர்கள், முன்னாள் ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தடயம் கிடைத்துள்ளது : மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறும்போது,‘‘ இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏசி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர்,’’ என்றார்.

SCROLL FOR NEXT