சென்னை: தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்பட அனைத்து வகையான குற்றச்செயல்களையும் முற்றிலும் தடுக்க அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ரவுடிகள், சமூக விரோதிகள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போலீஸார் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடந்த 15 முதல் 21-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 31 ஆயிரத்து 5 சரித்திரப்பதிவேடு ரவுடிகள், குற்றக் குணத்தார் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டனர்.
இதில் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய 1,155 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றும் நடவடிக்கையில், ஒரே வாரத்தில் 2,906 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன.
நிலுவையில் உள்ள பிடியாணைகளை முழுமையாக நிறைவேற்றவும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யவும் போலீஸார் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பிணை நிபந்தனைகளை மீறி மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் ஜாமீனை ரத்து செய்ய தேவையான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பி-க்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.