க்ரைம்

வத்திராயிருப்பு அருகே மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் மினி பேருந்து கவிழ்ந்த விபத்து ஏற்பட்டதில் பள்ளி மாணவர்கள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

வத்திராயிருப்பில் இருந்து வ.புதுப்பட்டிக்கு திங்கள் மாலை தனியார் மினி பேருந்து புறப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் பயணித்தனர். கிறிஸ்டியான்பேட்டை போதர் குளம் கண்மாய் அருகே வளைவான பகுதியில் வேகமாக சென்று திரும்பிய போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதிய மினி பேருந்து கவிழ்ந்தது.

தகவலறிந்து வந்த போலீஸார், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த வத்திராயிருப்பு இந்து மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் வ.புதுப்பட்டி அருகே நடுப்பட்டி பகுதியை சேர்ந்த நந்தகுமார்(16), பாண்டி(16) ஆகிய இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த 20 பேர் வ.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்ப்பட்டனர். விபத்து குறித்து வத்திராயிருப்பு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT