அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி பிரபல ஈரானிய இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு அந்நாட்டு அரசு, ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
உலக அளவில் கவனிக்கப்படும் ஈரானிய பட இயக்குநர், ஜாஃபர் பனாஹி. கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது பெற்ற ‘இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்ஸிடன்ட்’, பெர்லின் சர்வதேசப்பட விழாவில் தங்கக்கரடி விருது பெற்ற ‘டாக்ஸி’, வெனிஸ் பட விழாவில் தங்கச் சிங்கம் விருது பெற்ற ‘த சர்க்கிள்’ உள்பட பல படங்களை இயக்கியிருக்கிறார்.
இவர், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஒரு வருட சிறைத் தண்டனையும் 2 ஆண்டு பயணத்தடையையும் ஈரான் அரசு விதித்துள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என்று அவருடைய வழக்கறிஞர் முஸ்தபா நிலி தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வழக்கறிஞர், அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார். அரசுக்கு எதிராகத் திரைப்படங்களை உருவாக்கியதாக 2009-ம் ஆண்டு முதல் பல முறை பனாஹி கைது செய்யப்பட்டுள்ளார்.