விஜய் – த்ரிஷா நடித்து 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘திருப்பாச்சி’. பேரரசு இயக்கி இருந்தார். சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்தப் படம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு அக்.1-ம் தேதி மீண்டும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
விஜய்- த்ரிஷா நடித்த ‘கில்லி’ மறுவெளியீட்டிலும் வசூல் சாதனைப் படைத்ததால் இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இதன் மறுவெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ திரைப்படம் அக்.2-ம் தேதி வெளியாகிறது.
இதில் சந்தீப் கிஷன், ஃப்ரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்காக திருப்பாச்சி ரீ-ரிலீஸ் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி இப்படத்தை வெளியிடும் திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய சூழலில், பல புதிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளதால், அந்தப் படைப்புகளை ஊக்குவிக்கவும், தமிழ்த் திரையுலகின் சீரான வளர்ச்சிக்கு வழிவிடவும், ‘திருப்பாச்சி’ படத்தின் மறுவெளியீட்டைச் சிறிது காலத்துக்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.