லோகேஷ் கனகராஜ் வாக்களிக்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்விக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலளித்துள்ளார்.
ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘29’ படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக ஆர்.ஜே.பாலாஜி கலந்துக் கொண்டார். இந்த விழாவில் தேர்தல் நாளன்று லோகேஷ் கனகராஜ் ஏன் வாக்களிக்கவில்லை என்ற சர்ச்சைக்கு தனது பேச்சில் பதிலளித்தார் ஆர்.ஜே.பாலாஜி.
‘29’ நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது குறித்து ஆர்.ஜே.பாலாஜி, “தேர்தல் நாளன்று இணையத்தில் லோகேஷ் கனகராஜை அனைவரும் போட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள். நான் வாக்களித்துவிட்டு ஐபிஎல் போட்டிக்காக மும்பைக்கு சென்றேன். அன்று லோகேஷ் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ஓட்டுப் போட சென்றிருந்தார். இருவருமே சென்னை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசினோம்.
நான் விமானத்தில் ஏறும் முன்பு, லோகேஷ் கனகராஜை நான்கு பேர் அழைத்து சென்றுக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் இவர் செல்லும் முன்பு விமானத்தில் ஏறுவதற்கான கடைசி வாய்ப்பும் முடிந்து கதவை மூடிவிட்டார்கள். ஓட்டுப் போட போனார், ஆனால் அவரால் முடியவில்லை” என்று பேசினார் ஆர்.ஜே.பாலாஜி.