ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தின் நாயகன் யார் என்பது குறித்து இணையத்தில் விவாதித்து வருகிறார்கள்.
‘இந்தியன் 2’ படத்துக்கு பிறகு, ‘வேள்பாரி’ நாவலை படமாக்க உள்ளதாக ஷங்கர் பல்வேறு பேட்டிகளில் கூறியிருந்தார். அந்த சமயத்தில் அதன் நாயகன் யார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இதனிடையே, இன்று (டிச.2) காலை முதல் ‘வேள்பாரி’ படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணியில் இயக்குநர் ஷங்கர் மும்முரமாக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து ‘வேள்பாரி’ படத்தில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்று இணையத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக பல்வேறு நடிகர்களை வேள்பாரி நாயகனாக்கி வெளியிட்டு வருகிறார்கள். இந்த விவாதத்தினால் #Shankar என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதன் தயாரிப்பாளர், நடிகர் உள்ளிட்ட எந்தவொரு விஷயமும் இன்னும் முடிவாகவில்லை.
‘இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு, ‘இந்தியன் 3’ பணிகளைத் தொடங்கவிருந்தார் இயக்குநர் ஷங்கர். ஆனால், ‘இந்தியன் 2’ படத்தின் தோல்வியால், 3-ம் பாகத்தின் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. அப்பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கும் விடை தெரியாமல் உள்ளது. இயக்குநர் ஷங்கரின் அடுத்தப் படம் என்ன என்பது விரைவில் தெரியவரும்.