டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்திருக்கும் வெப் தொடர், ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’. ரஞ்சனா கதாநாயகியாக நடிக்க, தீபா சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்துரு, வசந்த், சிரில், வேலு, பவி, மணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
விஷ்ணுமணி வடிவு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த வெப் தொடருக்கு, வசந்த் தருண் இசையமைத்துள்ளார். மூவி ஸ்க்ரோல் சார்பில் எஸ்டி.சோமு தேவ் தயாரித்துள்ள இப்படத் தின் டீஸர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வெப் தொடர் பற்றி ஷங்கர் நாகதேவன் கூறும்போது, “தாய்மை அடைவது மற்றும் அதன் வலி குறித்து ஆண்களால் உணர முடியாது. ஒருவேளை ஒரு ஆண் தாய்மை அடைந்தால் எப்படி இருக்கும் என்கிற விதமாக இந்த கதை உருவாகியுள்ளது. நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வைப் பார்த்த போது தோன்றிய யோசனையில் இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம்.
கடவுள் ஒரு ஆணை படைக்கும்போது அவன் தலையெழுத்தை தப்பாக எழுதிவிட்டான் என்கிற கோணத்தில் இந்தக் கதையை நகைச்சுவையாக உருவாக்கி உள்ளோம். 5 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடர், மூவி ஸ்க்ரோல் என்ற யூடியூப் தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது” என்று கூறினார். பிப்.14-ல் இதன் முதல் எபிசோடு வெளியாகிறது. அடுத்தடுத்து அடுத்த எபிசோடுகளை வெளியிட உள்ளனர்.