தமிழ் சினிமா

ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம்: திரையை உயிர்ப்பிக்கும் காட்சிமொழி | ஒளி என்பது வெளிச்சமல்ல 42

சி.ஜெ.ராஜ்குமார்

திரைப்​படத்​தில் ஒரு கதா​பாத்​திரம் திரை​யில் தோன்​றும் தருணத்​தில் பார்​வை​யாளர்​கள் முதலில் கவனிப்​பது அவரது தோற்​றத்​தைத்​தான். அந்த தோற்​றத்தை உரு​வாக்​கு​வ​தில் ஆடை வடிவ​மைப்​பாளர், சிகை அலங்​காரக் கலைஞர், ஒப்​பனை​யாளர், கலை இயக்​குநர் மற்​றும் ஒளிப்​ப​தி​வாளர் ஆகியோர் ஒன்​றிணைந்து செயல்​படு​கின்​றனர்.

சிறந்த ஆடையலங்​காரம் என்​பது வெறும் உடை மட்​டுமே அல்ல; அது கதா​பாத்​திரத்​தின் வாழ்க்கை வரலாறு, சமூக நிலை, மனநிலை மற்​றும் கதை​யின் பயணத்தை வெளிப்​படுத்​தும் அமை​தி​யான காட்​சி மொழி​யாகும்.

ஆடை வடிவ​மைப்​பின் தொடக்​கம்

ஓர் ஆடை வடிவ​மைப்​பாளர் முதலில் திரைக்​கதையைப் படித்து ஒவ்​வொரு கதா​பாத்​திரத்​தை​யும் ஆராய்​கிறார். அவர் எந்த கால​கட்​டத்​தைச் சேர்ந்​தவர்? எந்த சமூகப் பின்​னணி​யில் வாழ்​கிறார்? அவரின் பொருளா​தார நிலை என்ன? கதை​யின் தொடக்​கத்​தி​லும் முடி​விலும் அவர் எவ்​வாறு மாறுகிறார்? இந்​தக் கேள்வி​களுக்​கான பதில்​களின் அடிப்​படை​யில் ஆடை வடிவ​மைப்​பாளர் தனது முதல் ஸ்கெட்ச்​சுகளை உரு​வாக்​கு​வார்.

இந்த வடிவ​மைப்​பு​களு​டன், துணி மாதிரி​கள் (Fabric Swatches), நிற மாதிரி​கள் (Color Samples), டெக்​ஸ்​ஸர் குறிப்​பு​கள், நகை மற்​றும் அணி​கலன் யோசனை​கள் ஆகிய​வை​யும் இணைக்​கப்​படும். பின்​னர் இயக்​குநர், ஒளிப்​ப​தி​வாளர், கலை இயக்​குநர் ஆகியோ​ருடன் விவா​தித்து இறுதி வடிவம் உரு​வாக்​கப்​படும்.

ஆடை தயாரிப்​பு: தையல், வாடகை மற்​றும் சேகரிப்பு

திரைப்​படத்​தின் பட்​ஜெட்​டைப் பொறுத்து ஆடைகள், புதி​தாகத் தயாரிக்​கப்படலாம், வாடகைக்கு எடுக்​கப்​படலாம், தேர்ந்​தெடுத்து புதி​தாக வாங்​கப்படலாம், பழமை​யான ஆடைகள் சேகரிக்​கப்​பட்டு மாற்​றியமைக்​கப்​படலாம்.

பீரியட் திரைப்​படங்​களில் இது மிக​வும் சிக்​கலான பணி. ஒவ்​வொரு பட்​ட​னும், தையல் முறை​யும், துணி அமைப்பு மற்​றும் அவற்றை அணி​யும் வித​மும் அந்​தக் கால​கட்​டத்​துடன் பொருந்த வேண்​டும். நடிகர்​களுக்​கான ஃபிட்​டிங் அமர்​வு​கள் நடத்​தப்​பட்​டு, அவர்​கள் வசதி​யாக நடிக்​கக்​கூடிய​வாறு ஆடைகள் சரிசெய்யப்​படு​கின்​றன.

சிகை அலங்​காரம்: காலத்​தின் காட்​சிக் குறி​யீடு

சிகை அலங்​காரம் ஒரு கதா​பாத்​திரத்​தின் அடை​யாளத்தை உரு​வாக்​கும் முக்​கிய​மான கரு​வி​யாகும். ஒரு வீரனின் அலங்​கோல​மான முடி, ஓர் அரசி​யின் நேர்த்​தி​யான பின்​னல், ஒரு தொழில​திபரின் கட்​டுப்​பா​டான ஹேர்​ஸ்​டைல் — இவை அனைத்​தும் கதையைச் சொல்​லத் தொடங்​கி​விடு​கின்​றன.

பொன்​னி​யின் செல்​வன், பாகுபலி, பிரேவ்​ஹார்ட் போன்ற திரைப்​படங்​களில் சிகையலங்​கார வடிவ​மைப்பு, கால​கட்​டத்தை உயிர்ப்​பித்த முக்​கிய அம்​ச​மாக இருந்​தது.

டெக்​ஸ்​ஸர், ஆடை​யின் காட்​சித் தாக்​கம்

ஒரு ஆடை​யின் நிறத்தை விட அதன் டெக்​ஸ்​ஸர் சில நேரங்​களில் அதிக முக்​கி​யத்​து​வம் பெறுகிறது. பட்​டு, வெல்​வெட், பருத்​தி, கம்​பளி, தோல் ஆகிய ஒவ்​வொன்​றும் ஒளியை வெவ்​வேறு வித​மாகக் கையாளுகின்​றன.

வெல்​வெட், ஒளியை உறிஞ்​சுகிறது. பட்​டுத்​துணி ஒளியை பிர​திபலிக்​கிறது. இதனால் ஒரே நிறத்​தில் இருக்​கும் 2 ஆடைகள் கூட கேம​ரா​வில் முற்​றி​லும் வேறு​பட்​டுத் தோன்​றலாம்.

லென்​ஸுகள், கேமரா சென்​சார்​கள் மற்​றும் ஆடைகள்

இன்​றைய டிஜிட்​டல் கேம​ராக்​கள் மிகத் துல்​லிய​மான விவரங்​களைப் பதிவு செய்​கின்​றன. ஆரி அலெக்​ஸா, சோனி வெனிஸ், ரெட் வி-ரேப்​டார் போன்ற கேம​ராக்​கள் ஆடை​யின் நுணுக்​க​மானத் நெசவு அமைப்​பு​களை​யும் கூடப் பதிவு செய்​கின்​றன.

இதனால், ஆடை வடிவ​மைப்​பில் இருக்​கும் கோடு​கள், நுண் வடிவங்​கள், சில நேரங்​களில் “மோயர்” (Moir) எனப்​படும் காட்​சிப் பிழைகளை உரு​வாக்​கலாம்.

அதனால் கேமரா டெஸ்ட்​டு​கள் மற்​றும் காஸ்ட்​யூம் டெஸ்ட்​டு​கள் மிக​வும் அவசியமாகின்​றன. பழைய அனமார்​பிக் லென்​ஸ்​களில் அழகாகத் தெரி​யும் ஆடை, நவீன டிஜிட்​டல் சென்​சார்​களில் வேறு​பட்டு தோன்​றலாம்.

நிறத் திட்​டம் (Color Palette)

ஒரு திரைப்​படத்​தின் காட்​சிமொழியை உரு​வாக்​கு​வ​தில் நிறங்​கள் மிக​வும் முக்​கிய​மானவை. ஆடை வடிவ​மைப்​பாள​ரும் ஒளிப்​ப​தி​வாள​ரும் இணைந்து ஒரு “Color Palette” உரு​வாக்​கு​கின்​றனர்.

காதல் படங்​கள் – மென்​மை​யான நிறங்​கள், த்ரில்​லர்​கள் – அடர் சாம்​பல் மற்​றும் நீலம், வரலாற்​றுப் படங்​கள் – மண் சார்ந்த நிறங்​கள், அறி​வியல் புனைக்​கதை – உலோக மற்​றும் நியான் நிறங்​கள். சில நேரங்​களில் கதா​நாயகனை கூட்​டத்​திலிருந்து தனித்​துக் காட்​டு​வதற்​காகத் திட்​ட​மிட்ட நிறங்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

ஒளிப்​ப​தி​வாளரின் நிறத் தேர்வு பல நேரங்​களில் இறுதி நிறத்தை ஒளிப்​ப​தி​வாளரே முடிவு செய்​கிறார். ஏனெனில், எந்த நிறம் எந்த ஒளி​யில் எப்​படி செயல்​படும்? கலர் கிரேடிங்​கிற்​குப் பிறகு அது எப்​படி மாறும்? பின்​னணியி​லிருந்து கதா​பாத்​திரம் பிரிந்து தெரி​யு​மா? என்​பதை அவர் அறி​வார்.

சில நேரங்​களில் தூய வெள்​ளைக்​குப் பதிலாக Off White பயன்​படுத்​தப்​படலாம். சில நேரங்​களில் சிவப்பு நிறம் சற்று அடக்​கப்​படலாம். இது அனைத்​தும் கேமரா மற்​றும் ஒளி​யின் தேவைக்​கேற்ப முடிவு செய்​யப்​படு​கிறது.

காஸ்ட்​யூம் மற்​றும் லைட்​டிங் கன்​டினி​யுட்டி

திரைப்​படங்​கள், கதை வரிசைப்​படி படமாக்​கப்​படு​வ​தில்​லை. எனவே சட்டை எவ்​வளவு அழுக்​காக இருந்​தது? மழை​யில் எவ்​வளவு நனைந்​தது? ரத்​தக் கறை எங்கே இருந்​தது? போன்ற விவரங்​கள் அனைத்​தும் பதிவு செய்​யப்​படு​கின்​றன.

இதுவே காஸ்ட்​யூம் கன்​டினி​யுட்​டி. அதே​போல் லைட்​டிங் கன்​டினியுட்​டி​யும் முக்​கியம். ஒரே காட்​சி​யில் ஒரு ஆடை காலை ஒளி​யில் ஒரு வித​மாக​வும் மாலை ஒளி​யில் வேறு​வித​மாக​வும் தோன்​றக்​கூ​டாது.

ஆபத்​தான காட்​சிகள் மற்​றும் டபுள் காஸ்ட்​யூம்ஸ்

சண்​டைக் காட்​சிகள் மற்​றும் மழைக் காட்​சிகளுக்​காக ஒரே ஆடை​யின் பல பிர​தி​கள் தயாரிக்​கப்​படு​கின்​றன. இதனை டபுள் காஸ்ட்​யூம்ஸ் என்​கிறார்​கள். பெரிய பட்​ஜெட் திரைப்​படங்​களில் முப்​பது பிர​தி​கள் கூட தயாரிக்​கப் படு​கின்​றன. இதனால் கன்​டினியூட்டி பாது​காக்​கப்​படு​கிறது.

மெமோயர்ஸ் ஆஃப் கெய்​ஷா : ஆடைகள் மூலம் சொல்​லப்​பட்ட வாழ்க்கை

ஆடை வடிவ​மைப்​பாளர் கொலீன் அட்​வுட் உரு​வாக்​கிய இத்​திரைப்​படத்​தில் கதா​நாயகி அணி​யும் ஒவ்​வொரு கிமோனோ​வும் அவளது வாழ்க்​கை​யின் ஒரு கட்​டத்​தைக் குறிக்​கிறது. ஏழை மீனவரின் மகள், நடனப்​பயிற்சி பெறும் இளம் பெண், புகழ்​பெற்ற கெய்ஷா என அவளது பயணத்தை ஆடைகளின் மூலமே பார்​வை​யாளர்​கள் உணர்​கிறார்​கள்.

கிரீன் மேட் மற்​றும் ஆடை வடிவ​மைப்பு

இன்​றைய விஎஃப்​எக்ஸ் திரைப்​படங்​களில் க்ரீன் மற்​றும் ப்ளூ ஸ்க்​ரீன் முக்​கிய பங்கு வகிக்​கின்​றன. பச்சை பின்​னணி​யில், பச்சை ஆடைகள் தவிர்க்​கப்பட வேண்​டும். நீலப் பின்​னணி​யில், நீல நிற ஆடைகள் தவிர்க்​கப்பட வேண்​டும்.

இல்​லை​யெனில் குரோமா கீ செயல்​பாட்​டின் போது ஆடை​யின் பகு​தி​கள் காணா​மல் போகலாம். மேலும் க்ரீன் ஸ்பில் எனப்​படும் பச்​சைப்பிர​திபலிப்பு வெள்ளை மற்​றும் பளபளப்​பான துணி​களில் படிய​லாம்.

லென்ஸ் ஃபிளேர் மற்​றும் ஆடைகள்

அனமார்​பிக் லென்​ஸுகள் மற்​றும் விண்​டேஜ் லென்​ஸுகள் பயன்​படுத்​தப்​படும் போது லென்ஸ் ஃபிளேர்​கள் உரு​வாகின்​றன. உலோக நகைகள், கண்​ணாடி வேலைப்​பாடு​கள், பட்டு ஆடைகள் ஒளியைப் பிர​திபலித்து அழகான ஃபிளேர்​களை உரு​வாக்​கு​கின்​றன. லாரன்ஸ் ஆஃப் அரேபி​யா, ட்யூன், டாப் கன் மேவ்​ரிக் போன்ற படங்​களில் இது காட்​சி​யின் ஒரு பகு​தி​யாகவே பயன்​படுத்​தப்பட்​டுள்​ளது.

கேமரா இயக்​கம், ஆடைகளின் உயிரோட்​டம்

ஒரு ஆடை நிலை​யாக இருக்​காது; அது கேம​ரா​வுடன் சேர்ந்து இயங்​கும். காற்​றில் பறக்​கும் மேலங்​கி, போர்க்​களத்​தில் அசை​யும் கொடி போன்ற உடைகள். இவை அனைத்​தும் கேமரா இயக்​கத்​துடன் இணைந்​தே திட்​ட​மிடப்​படு​கின்​றன. சில நேரங்​களில்​ ஒரு ஆடை கதா​பாத்​திரத்​தை விட அதி​க​மாக நினை​வில்​ நிற்​கும்​.

(புதன்​தோறும்​ ஒளி​காட்​டுவோம்​)

- cjrdop@gmail.com

SCROLL FOR NEXT