அமைச்சர் ராஜ்மோகன் குறித்த விஷாலின் கருத்துக்கு திரைத் துறையினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித் துறை, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத் தணிக்கைச் சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, அரசு அச்சகம், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் விஷால், “ராஜ்மோகனுக்கு என்ன முன் அனுபவம் இருக்கிறது? அவருக்கு இந்தப் பதவி எப்படி சரியாக இருக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விஷாலின் இந்தக் கருத்து, திரைத் துறையினர் மற்றும் இணையவாசிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் “நீங்கள் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தபோது உங்களுக்கு என்ன முன் அனுபவம் இருந்தது?” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் “உங்களது பதிவு அருவருக்கத்தது” எனவும் பதிவிட்டு வருகிறார்கள்.
விஷாலின் கருத்து குறித்து அருண் விஜய் குறிப்பிடும்போது, “மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தேர்தலில் வென்று அதன் பிறகு உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். தயவுசெய்து தற்போதைய முடிவுகளில் தலையிடாதீர்கள். எந்தத் துறையைச் சார்ந்தவரோ, அதே துறையைச் சேர்ந்த ஒருவராக இருந்தால் அவர் நமது பிரச்சினைகளை நன்கு அறிவிவார் என்றும், நிச்சயமாக உதவுவார் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
தயவுசெய்து அவரது முடிவுகளுக்கு மதிப்பளியுங்கள். அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இப்போதே எந்தவொரு முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். அனைத்து நல்லபடியாகவே அமையும் என நம்புவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
விஷாலைக் குறிப்பிடாமல் தயாரிப்பாளர் சிவா, “அமைச்சர் ராஜ்மோகன் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் மட்டுமல்ல, அந்த துறையில் நல்ல அனுபவமும் கொண்டவர். அவர் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும், சினிமா துறையில் பலருடன் நல்ல நட்பும் நெருக்கமும் கொண்டவர்.
தமிழ் சினிமா துறையின் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலைகளை நன்கு அறிந்தவராக இருப்பதால், அவரை தமிழ் திரைப்படத் துறை அமைச்சராக தேர்வு செய்திருப்பது மிகவும் சரியான முடிவாகும். இந்த சிறந்த தேர்வை செய்த முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.