அறிமுக இயக்குநர் ராகுல் அசோக் இயக்கியுள்ள படம் ‘வெஞ்சென்ஸ்’. இதில் அபர்ணதி, சச்சு, ஒய்.ஜி.மகேந்திரா, ஜான் விஜய், இளவரசு, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா, அருண் ராஜ் இசை அமைத்துள்ளனர்.
இப்படம் பற்றி இயக்குநர் ராகுல் அசோக் கூறும்போது, “நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் குறும்படம் இயக்கிய அனுபவத்தின் மூலம் இதை இயக்கி இருக்கிறேன். இது வேணி என்கிற ஒரு பெண்ணின் கதை. அவருடைய இயல்பான வாழ்க்கை ஓர் இடத்தில் ஆரம்பித்து எங்கு போய் நிற்கிறது என்பதுதான் படம். இது 2002-ல் நடக்கும் அரசியல் கதை. கற்பனைக் கதைதான்.
இங்கு இருக்கிற சம்பவங்களுடன் தொடர்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக, கற்பனையான ஒரு மாநிலத்தில் நடக்கும் கதையாக உருவாக்கி இருக்கிறோம். வேணி என்ற கதாபாத்திரத்துக்கு அபர்ணதி மிகவும் சரியாகப் பொருந்தி இருக்கிறார். அவருடைய நடிப்பு பேசப்படும்.
படத்தில் வருகிற ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்கும். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. மார்ச் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும்படியான படமாக இருக்கும்” என்றார்.