திரைப்படத்தில் காட்சிகள் கதையோடு சேர்ந்து உயிர்ப்புடன் நகர வேண்டும். கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளோடு சேர்ந்து கேமராவும் பயணிக்கும்போதுதான் பார்வையாளர் படத்துக்குள் முழுமையாக நுழைகிறார்.
இந்த அனுபவத்தை உருவாக்குவதில் ஒளிப்பதிவாளர் முதன்மைப் பங்கு வகித்தாலும், அவரது கற்பனையை திரையில் நடைமுறைப்படுத்தும், வெளியே தெரியாத நாயகர்கள் கிரேன் ஆபரேட்டர்கள், டிராலி மற்றும் கிரிப் ஆபரேட்டர்கள் ஆவர்.
ஒரு பிரம்மாண்டமான திரைப்படத் தளத்தில் கேமராவை சில அங்குலங்கள் நகர்த்துவதற்குக் கூட பல மனிதர்களின் கூட்டு உழைப்பும், துல்லியமான இயற்பியல் கணக்கீடுகளும் தேவைப்படுகின்றன.
ஒரு மென்மையான டிராக்கிங் ஷாட், வானில் மிதக்கும் கிரேன் ஷாட் அல்லது அதிரடிக் காட்சியில் பறக்கும் கேமரா அசைவு அனைத்துக்கும் பின்னால் இருக்கும் தொழில் நுட்பத் திறமை பெரும்பாலும் பார்வையாளர்களுக்குத் தெரிவதில்லை.
கிரிப் துறை என்றால் என்ன?
திரைப்படத் துறையில் ‘கிரிப்’ என்பது கேமரா மற்றும்லைட்டிங் உபகரணங்களை பாதுகாப்பாகத் தாங்கும், நகர்த்தும், நிலைநிறுத்தும் பேராற்றல் கொண்ட தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவுத் துறை கேமராவை கவனித்துக் கொள்கிறது. மின்சாரத் துறை விளக்குகளைக் கவனிக்கிறது. இந்த துறைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருவது கிரிப் துறை.
டிராலி தண்டவாளங்கள் அமைத்தல், கிரேன்களை நிறுவுதல், கேமரா ரிக்கிங் வேலைகள், வாகனங்களில் கேமராவைப் பொருத்துதல், ஒளியை வடிவமைக்கும் ஃபிளாக்ஸ் (Flags), ஸ்கிரிம்ஸ் (Scrims), சில்க்ஸ் (Silks) அமைத்தல் மற்றும் பாதுகாப்புக் கண்காணிப்பு ஆகியவை அவர்களது பணி.
ஒரு திரைப்படத் தளத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கேமராக்கள், விளக்குகள் மற்றும் மனித உயிர்கள் பாதுகாப்பாக இயங்குவதற்குக்காரணமாக இருக்கும், கிரிப் துறையை வழிநடத்துபவர் ‘கீ கிரிப்’ (Key Grip) என அழைக்கப்படுகிறார். ஒளிப்பதிவாளரின் தேவைகளை முழு குழுவுக்கும் புரியவைத்து அதை நடைமுறைப் படுத்துபவர்.
டிராலி ஆபரேட்டர் – கேமராவின் பாதையை உருவாக்கும் கலைஞர்
கேமராவையும், ஒளிப்பதிவாளரையும் சுமந்துகொண்டு மென்மையாக நகரும் சக்கர அமைப்பான டிராலியை இயக்குபவர் டிராலி கிரிப். திரையில் பார்க்கும்போது மிகவும் எளிமையாகத் தோன்றும் ஒரு டிராலி ஷாட், சில மணிநேர உழைப்பைக் கோரும்.
மணல், புல்வெளி, மாடிப்படி அல்லது சாய்வான சாலை எதுவாக இருந்தாலும், கிரிப் குழுவினர் Spirit Level, Wedges, Apple Boxes மற்றும் அளவீட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி டிராக்கை முற்றிலும் சமப்படுத்துவார்கள்.
சிறிய ஏற்றத் தாழ்வு கூட கேமராவில் அதிர்வை உருவாக்கும். சில நேரங்களில் வெறும் 20 விநாடிகள் ஓடும் ஒரு ஷாட்டுக்காக 1/2 மணி நேரம் வரை டிராக் அமைக்கும் வேலை நடைபெறும்.
டிராலி ஆபரேட்டரின் நேர உணர்வு
ஒரு டிராலி ஆபரேட்டருக்கு இசை உணர்வு, தாள லயம், நேர உணர்வு மற்றும் நடிகர்களின் உடல் மொழியைப் புரிந்துகொள்ளும் திறன் இருக்க வேண்டும். பாடல் காட்சிகளில் இசையின் தாளத்துக்கேற்ப கேமராவும் நகர வேண்டும்.
நடனக் கலைஞர்களோடு கேமராவும் ஒத்திசைவாக இயங்க வேண்டும். உணர்ச்சி மிகுந்த வசனக் காட்சிகளில் நடிகர் மெதுவாக நகர்ந்தால் கேமராவும் மெதுவாக நகர வேண்டும்.
நடிகர் திடீரென நிறுத்தினால் டிராலியும் அதே தருணத்தில் நிற்க வேண்டும். ஒளிப்பதிவாளர் மானிட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் நடிகரின் அசைவையும் கேமராவின் இடைவெளியையும் கணித்து அந்த நொடியில் முடிவெடுப்பது டிராலி ஆபரேட்டர்தான்.
நீண்ட டிராக்கிங் ஷாட்டுகள்
இன்றைய நவீன சினிமாவில் ஒரு பிரம்மாண்டமான நீண்ட டிராக்கிங் ஷாட் அல்லது ‘ஒன்-டேக்’ காட்சி என்பது ஒரே கருவியால் உருவாக்கப்படுவதில்லை. ஒரு ஷாட், கிரேனில் தொடங்கலாம். பின்னர் கேமரா ஸ்டெடிகேமுக்கு மாற்றப்படலாம்.
அதன்பின் கிம்பலுக்கு மாற்றப்படலாம். அங்கிருந்து ஒரு வாகன ரிக் அமைப்புக்குச் செல்லலாம். பின்னர் மீண்டும் கைமுறை இயக்கத்துக்கு மாறலாம்.
ஒரு பெரிய கூட்டத்தின் மீது பறக்கும் கிரேன் ஷாட்டில் தொடங்கும் காட்சி, மெதுவாகக் கீழிறங்கி ஒரு நடிகரைப் பின்தொடரலாம். அந்தத் தருணத்தில் கிரேன் குழுவினர் கேமராவை கிம்பல் அல்லது ஸ்டெடிகேம் ஆபரேட்டரிடம் பாதுகாப்பாக ஒப்படைப்பார்கள்.
பறக்கும் கேமரா அசைவுகளின் கலை
பார்வையாளர்களை மிகவும் கவரும் அம்சங்களில் ஒன்று ‘பிளையிங் கேமரா மூவ்மென்ட்’. கேமரா தரையிலிருந்து வானுக்கு எழுவது, கூட்டத்தின் மேல் மிதப்பது, ஒரு கட்டிடத்தைச் சுற்றி நகர்வது அல்லது மிகப்பெரிய பரப்பைக் கடந்து பயணிப்பது போன்ற அசைவுகள் பார்வையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த வகை அசைவுகளுக்காக டெக்னோகிரேன், கேபிள் கேம், ரிமோட் ஹெட் சிஸ்டம்ஸ்,கிம்பல் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. சில உலகப் புகழ்பெற்ற நீண்ட டிராக்கிங் ஷாட்கள் இன்றும் சினிமா ரசிகர்களிடையே விவாதப் பொருளாக உள்ளன.
அவை உண்மையான ஒரே ஷாட்டா அல்லது மறைமுகக் கட்டுகள் கொண்டவையா என்ற விவாதம் இருந்தாலும், அனைத்துக்குப் பின்னாலும் அசாதாரணமான கிரிப் கலைஞர்களின் கூட்டு உழைப்பு இருக்கிறது.
கிரேன் ஆபரேட்டர்
கேமராவை தரையிலிருந்து மரங்களின் உயரம் வரை அல்லது கட்டிடங்களின் மேல் வரை எடுத்துச் செல்லும் சினிமாவின் பிரம்மாண்டமான கருவிகளில் ஒன்று கிரேன். 40 அடி அல்லது 50 அடி கிரேனை இயக்குவதற்குப் பொதுவாக 7 முதல் 8 தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை தேவைப்படுவார்கள்.
எதிர் எடைகளை சமநிலைப்படுத்துதல், பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்ளுதல், கேமராவின் எடை மற்றும் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்தல் ஆகியவற்றைச் செய்வர். ஒரு சிறந்த கிரேன் ஆபரேட்டர் கேமராவை ஒரு பறவை பறப்பதைப் போல மென்மையாக நகர்த்துவார்.
மேனுவல் கிரேன் முதல் அகேலா வரை
முன்பு பெரும்பாலான கிரேன்கள் மனிதர்களால் இயக்கப்பட்டன. ஒளிப்பதிவாளரும் ஃபோகஸ் புல்லரும் கிரேனில் அமர்ந்து பயணிப்பார்கள். பின்னர் Jimmy Jib போன்ற நவீன அமைப்புகள் வந்தன. Remote Head மூலம் கீழே இருந்தபடியே Pan, Tilt மற்றும் Zoom இயக்கங்களை கட்டுப்படுத்த முடிந்தது.
இந்தியத் திரைப்படங்களில் அகீலா கிரேன் (Akela Crane) மிகவும் பிரபலமானது. வேகமாக அமைக்கக் கூடியதும், நீண்ட தூர அசைவுகளை வழங்கக்கூடியதுமான இந்த அமைப்பு பல பெரிய படங்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஸ்டெடிகேம் மற்றும் கிம்பல்
இவை சினிமாவின் அசைவு மொழியை மாற்றியமைத்துள்ளன. ஸ்டெடிகேம் ஆபரேட்டர் உடலில் அணியும் சிறப்பு அமைப்பின் மூலம் கேமராவின் உறிஞ்சிக் கொண்டு இயற்கையான அசைவுகளை உருவாக்குகிறார்.
கிம்பல் மூன்று அச்சு மோட்டார் அமைப்பின் மூலம் மிக மென்மையான அசைவுகளை வழங்குகிறது. இருப்பினும் இந்த 2 கருவிகளையும் திறமையாக இயக்குவதற்கு உடல் வலிமை, சமநிலை மற்றும் அனுபவம் அவசியம்.
ஒளியை நகர்த்தும் கிரிப் கலைஞர்கள்
சினிமாவில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், நிலவொளி போன்ற பல காட்சிகள் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன. இதற்காக பெரிய HMI விளக்குகள், Condor Lifts மற்றும் உயரமான கிரேன் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
திரையில் அது சூரியன் உதயமாகும் உணர்வை உருவாக்கும். நடிகர் நடந்து செல்லும்போது, அவருடன் ஒளியும் நகரும். பார்வையாளர்கள் அதை இயற்கையான சூரிய ஒளி அல்லது நிலவொளி என்று நம்புவார்கள். அதுவே கிரிப் மற்றும் லைட்டிங் குழுவின் வெற்றி.
இந்தியத் திரைப்படத் துறையில், குறிப்பாக தமிழ் சினிமாவில், பல கிரிப் மற்றும் கிரேன் கலைஞர்கள் தினசரி பேட்டா அல்லது தினசரி ஊதிய அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.
அவர்கள் வெயிலில் வேலை செய்கிறார்கள். மழையில் டிராக் அமைக்கிறார்கள். இரவு முழுவதும் கிரேன்களை நிறுவுகிறார்கள். திரையில் அவர்கள் பெயர்கள் சில விநாடிகள் மட்டுமே தோன்றும்.
(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)
- cjrdop@gmail.com