தமிழ் சினிமா

‘காக்கி’யைத் தொட்ட கிருஷ்ணா, மணிகண்டன்!

செய்திப்பிரிவு

எவ்வளவு சிறந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ஒருமுறையாவது காக்கிச் சட்டை அணிந்து நடிக்காவிட்டால் ஜென்ம சாபல்யம் கிடைக்காது என நம்புபவர்கள் நம் கதாநாயகர்கள்.

அந்த வரிசையில் கிருஷ்ணா தற்போது ‘மர்டர் இன் டவுன்’ படத்தின் மூலம் காவல் அதிகாரி கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். இது அவரது 25ஆவது படம்.

மனு மந்த்ரா கிரியேஷன்ஸ் - ஸ்ரீவிஷ்ணு கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் ‘மர்டர் இன் டவுன்' படத்தை, பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார்.

ஒரு விறுவிறுப்பான குற்றப் புலனாய்வு திரில்லராக உருவாகியிருக்கும் இது, காவல் துறையிலேயே நடக்கும் குற்றங்களை மையப்படுத்திய கதைக் களம் என்பது ஸ்பெஷல். கிருஷ்ணாவைப் போலவே ஓர் இடைவேளைக்குப் பிறகு பிந்து மாதவி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

பால சரவணன், வைபவ் முருகேசன், ஆர்.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ‘தெறி’ புகழ் பேபி நைனிகா உள்படப் பலர் நடித்திருக்கிறார்கள்.

காக்கியை முதல் முறையாகத் தொட்டுள்ள இரண்டாவது நடிகர் ‘ஜெய் பீம்’ புகழ் மணிகண்டன். ‘குடும்பஸ்தன்’ படத்துக்குப் பின் நடிக்காமலிருந்த இவர், தற்போது நீலம் ஸ்டுடியோஸ் - பிர்லா ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ என்கிற படத்தில் காவலர் வேடம் ஏற்றிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு இசை நிவாஸ் கே. பிரசன்னா. இது அரசியலையும் காவல் துறையையும் இணைக்கும் கதை என்று கூறியிருக்கிறார் இயக்குநர்.

SCROLL FOR NEXT