

கேரளம் தந்த திறமையான பெண்களில் ஒருவரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்றோம். புத்தாயிரத்துக்குப் பிறகான வரவுகளில் நயன்தாரா முதல் இன்றைய மமிதா பைஜு வரை அவர்களின் வசீகரத்துக்காகக் கொண்டாடுகிறோம்.
ஆனால், முதல் முறையாக ஒருவர் நடிப்புத் திறமைக்காக 2கே, ஜென் ஸீ கிட்ஸ்களால் ‘கிளாஸ்’ எனக் கொண்டாடப்படுகிறார்! அவர்தான் சுவாசிகா. அவரின் இன்றைய வெற்றியை அறிமுகப் படம் தீர்மானிக்கவில்லை. பல தோல்விகளுக்குப் பிறகு அவர் நடிக்கத் தேர்ந்தெடுத்த சவாலான கதாபாத்திரங்கள்தான் தீர்மானித்தன.
‘லப்பர் பந்து' படத்தில் யசோதாவாக அவர் திரையில் தோன்றியபோது, "யார் இந்தப் பெண்? அதுவும் நம்மனதுக்கு இவ்வளவு நெருக்கமாக..!" என்று ரசிகர்கள், அவரது விக்கி பக்கத்தைத் தேடினர். ஒரு வெற்றிப்படம், அதில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமான படத்தை யூடியூபில் தேடிப் பார்க்க வைத்தது. ஆணோ - பெண்ணோ ஒரு சிறந்த நடிப்புக் கலைஞருக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பெரிய வெற்றிகளில் இந்தத் தேடலும் ஒன்று.
மூன்று படங்களும் முறிந்த இதயமும்
2009இல் ‘வைகை' படத்தில் விஷாகா என்கிற பெயரில் அறிமுகமானார் சுவாசிகா. சாதியை மீறி, வர்க்க வேறு பாட்டைக் காலால் மிதித்தபடி தன்னை நேசிக்கும் இளைஞனை நிபந்தனையின்றிக் காதலிக்கும் படித்த இளம்பெண்ணாக அசாதாரணமான நடிப்பை வழங்கியிருந்தார்.
எதிர்பாராத வகையில் தற்கொலை செய்துகொள்ளும் காதலனின் சடலத்தின் முன் உடைந்து அழும் அந்த உச்சக்கட்டக் காட்சி, சுவாசிகா எப்படிப்பட்டத் திறமையாளர் என்பதை அப்போதே அறிவித்தது.
ஆனால் படம் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து ‘கோரிப்பாளையம்', ‘மைதானம்' ஆகிய இரண்டாவது மூன்றாவது படங்களிலும் கவனிக்கத்தக்கக் கதாபாத்திரங்களில் தரமான நடிப்பைக் கொடுத்தார்.
மனம் தளராமல் முதல் மூன்று படங் களிலும் நடித்த சுவாசிகா சென்னையை விட்டு ஓடி விடவில்லை. திரையரங்கைவிட்டு ஓடியதென்னவோ அவர் நடித்த படங்கள் தான். நன்றாக நடித்தும் நமக்கு ஏன் வாய்ப்புகள் வரவில்லை என்று இதயம் ஒடிந்தார். ஆனால், தொடர்ந்து ஆடிஷன்களுக்கு அலைந்தார். பணம் செலவழிந்த நாள்களில் சிக்கனம் கருதி மாநகரப் பேருந்திலும்கூட அவர் பயணப்பட்டார்.
சின்னத் திரை கொடுத்த அங்கீகாரம்
எர்ணாகுளம் அருகேயுள்ள கீழில்லம் என்கிற ஊரில் பூஜாவாக பிறந்து வளர்ந்த சுவாசிகா, பத்தாம் வகுப்பு முடித்தபோது பரத நாட்டிய அரங்கேற்றம் செய்திருந்தார். 11ஆம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்வதைவிட ‘தமிழ் சினிமாவில் புகழ்பெற வேண்டும்’ என்று 18ஆவது வயதில் தன்னுடைய அம்மா கிரிஜாவுடன் சென்னைக்கு வந்துவிட்டார்.