தமிழ் சினிமா

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை...” - கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

வெற்றி மயிலோன்

சென்னை: “எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும்.” என நடிகர் ரவி மோகன் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.

நடிகர் ரவி மோகன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இது என்னுடைய தனிப்பட்ட பேட்டி, இதற்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் கிடையாது. இத்தனைநாள் பேசாமல் அமைதி காத்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். ரவி மிகவும் மென்மையானவர், அவர் எதைச் சொன்னாலும் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்துவிடுவார் என்று நினைத்துக் கொண்டார்கள். அதுதான் என்னுடைய கேரக்டர். ஆனால், ‘சாது மிரண்டால் காடு தாங்காது...’ சாதுவாக இருந்த என்னை நிறைய பேர் சீண்ட நினைக்கிறார்கள். இதுதான் என் அலுவலகம், இங்கே வாருங்கள். மறைமுகமாக இல்லாமல் நேரடியாக வாருங்கள்.

எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை இனி என் படங்கள் வெளியாகாது. விவாகரத்து கிடைக்கும் வரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. 23 ஆண்டுகள் இரவு பகலாக வேலை செய்துள்ளேன். என்னுடைய 95 சதவீத படங்கள் வெற்றியடைந்துள்ளன. மாநில விருதுகள், கலைமாமணி விருதுகள் பெற்றுள்ளேன். என் குடும்பத்தைக் காப்பாற்ற நிறைய உழைத்துள்ளேன். என் குடும்பத்தைச் சீண்டினால் சும்மா விட மாட்டேன்.

என்னை சீண்டினால் விட்டுவிடுவேன் என்று நினைத்தீர்களா?. பெண்ணுரிமை என்றால் என்னவென்று தெரியுமா?. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நான் படம் எடுத்தேன். பெண் உரிமைகளுக்காக என் படங்களில் குரல் கொடுத்துள்ளேன். நான் பெண்களுக்கு எதிரானவனா?.

14 ஆண்டுகள் என் திருமண வாழ்க்கையில் நன்றாகத் தானே இருந்தேன். அதனை அவர்களே சொல்லியுள்ளனர். அதற்கான வீடியோ ஆதாரங்களே என்னிடம் உள்ளன. குழந்தைகளுக்காக 14 வருடங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன். இப்போது என் குழந்தைகளை பார்க்க விடமாட்டேன் என்கிறார்கள். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும். என் பிள்ளைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் கல்விக் கட்டணம் கட்டி நான் இப்போது வரை படிக்க வைக்கிறேன். என் பாசத்தை பற்றி மட்டும் பேசாதீர்கள். குழந்தைகள் மீது அன்பில்லாதவன் என்று என்னைச் சொல்லாதீர்கள்.

அத்தனை கோடிகளில் வீடு கட்டிக் கொடுத்தேனே, உங்களுக்காக தானே. இருக்கும்போது என்னை நன்றாக பார்த்துக் கொள்ளாதவர்கள் அவர்கள். அந்த வாழ்க்கை பிடிக்காமல் தானே தெறித்து ஓடி வந்தேன். ஒரு குழு அமைத்து, காசு கொடுத்து அவதூறு பரப்புகிறார்கள். சைபர் புல்லியிங் செய்து ஒரு பெண்ணை அனுப்பி விட்டார்கள். கெனிஷாவை காலி பண்ணி அனுப்பி விட்டார்கள். அதற்காகவெல்லாம் இந்தப் பேட்டி கொடுக்கவில்லை. யாருக்கு அநீதி நடந்தாலும் குரல்கொடுப்பேன்.

நான் இப்போது வாடகை வீட்டில் உள்ளேன். அவர்கள் கோடிக்கான ரூபாய் மதிப்புடைய வீட்டில் நன்றாகவே உள்ளார்கள். வெளியே போங்கள் என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மனிதனை நிம்மதியாக வேலை செய்ய விடவில்லை என்றால் எப்படி?. எவ்வளவு கிண்டல் செய்தாலும் நான் சும்மாவே இருக்க வேண்டுமா?. ஒரு மனிதனுக்கு கஷ்டம் வரும்போதுதான் யார் கூட இருப்பார்கள் என்பது தெரியும். அப்படி என்கூட நின்ற பெண் தான் கெனிஷா. ஒரு பெண் என்னை புரிந்துகொண்டார். நான் பார்க்காத பெண்களா?. என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். அழகில் மயங்கி அப்படியே நான் போய்விட்டேனா. அவர்களுக்கு ஒரு காரணம் தேவை. இதனை பிடித்துக்கொண்டார்கள்.

ஒரு நாளில் விவாகரத்து வாங்கியிருப்பேன், என் பிள்ளைகளுக்காக பொறுத்துக் கொண்டேன். அந்த வீட்டில் என்னென்ன நடந்தது என்று ஊரில் கேட்டு பாருங்கள். என் அப்பா அம்மா காலில் விழுந்து அந்த குடும்பம் வேண்டாம் என்றார்கள். அட்சதை போடும்போதே நாசமாக போவாய் என்று தான் போட்டார்கள். அது இப்போது நடந்துவிட்டது.

இப்படி உடைந்து போய் பேசுகிறவனா நான். ஒரு கரும்புள்ளி கூட இல்லாமல் 23 வருடங்கள் சினிமாவில் இருந்துள்ளேன். ஒரு சிறிய அன்பு இருந்திருந்தால், இப்படிப் பேசுவேனா நான். வாழ்க்கையில் நான் சந்தித்த எல்லாவற்றையும் அவர்களிடம் கொடுத்துவிட்டேன். சொல்ல முடியாத அளவுக்கு எனக்கு அநியாயம் நடந்தது. நான் உயிரோடு இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கம். அதற்காக குழு அமைத்து வேலை செய்கிறார்கள்.

நான் போய்விடுவேன், ஆனால் அவர்களை முடித்துவிட்டுதான் போவேன். என் குழந்தைகளை பார்க்க விடவில்லை என்பதற்காக, என் கைகளை அறுத்துக்கொண்டு என்னை நானே துன்புறுத்திக் கொள்கிறேன். எனது தனிப்பட்ட பிரச்சினைகளை முடித்துக் கொண்டு மீண்டும் நடிக்க வருகிறேன். மூன்றெழுத்து இட்லி நடிகை என் வாழ்க்கையை கெடுக்கும் வேலைகளைச் செய்து வருகிறார். என்னைப் பற்றி பேச அவருக்கு என்ன அருகதை உள்ளது. எனக்கு செய்வினை செய்து, இப்போது எனக்கு ரத்த வாந்தி வருகிறது.

வீட்டில் எனக்கு நிம்மதியையும், மரியாதையையும் தான் நான் எதிர்பார்த்தேன். கடந்த 4 ஆண்டுகளாக அவர்களோடு எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை. ஒருவரின் வாழ்க்கையில், இமேஜில் விளையாடக் கூடாது. இந்த திருமணம் வேண்டாம் என ஆரம்பத்திலேயே என் குடும்பத்தினர் சொன்னார்கள். கையை அறுத்துக்கொண்டுதான் அவர் என்னை திருமணம் செய்தார். அவர்களே ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து, அதில் மட்டுமே என்னை நடிக்கும்படி செய்தனர். பல பிரச்சினைகளை தாண்டி, ஒரு பெண் என்னை புரிந்து கொண்டார். அவரை இப்போது துரத்துவிட்டு விட்டார்கள்.” இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT