தமிழ் சினிமா

அஞ்சலி: தேவாவின் இசை நிற்காது!

Guest Author

தொண்ணூறுகளில் தொடக்கத்தில், இளையராஜாவுக்குப் போட்டியாக ஏ.ஆர்.ரஹ்மான் வந்துவிட்டார் என்று திரையுலகமும் ரசிகர்களும் பேசிக்கொண்டிருந்தபோது, சத்தமில்லாமல் உள்ளே நுழைந்து, “3-வது நபராக நானும் இருக்கிறேன்” என்று அழுத்தமாகக் காலூன்றியவர் தேவா. இளையராஜாவின் இசை ஆதிக்கமும், ரஹ்மானின் புதிய ஒலியமைப்பும் தமிழ் சினிமாவில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், தேவா தனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்தார். அந்தப் பாதை, வெகுஜன மக்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அவர்களோடு நேரடியாக உரையாடும் பாதை.

1992-ல் வெளியான ‘அண்ணாமலை’யில் ரஜினிகாந்துடன் தேவா முதன்முறையாக இணைந்தபோது உருவான அந்த இசை, தமிழ் சினிமாவின் முக்கியமான திருப்பங்களில் ஒன்றாக அமைந்தது. அன்றைய சூழலில், ரஜினிகாந்தின் படத்துக்கு புதிய இசையமைப்பாளர் இசையமைப்பது என்பதே கவனத்துக்குரிய விஷயம். அதுவும் இளையராஜாவின் இசை நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தியிருந்த திரையுலகில், ரஜினி போன்ற பெரிய நட்சத்திரத்தின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்று,தன்னை நிரூபிப்பது சாதாரணமானதல்ல.

1986-ல் அறிமுகமான தேவா, அடுத்த சில ஆண்டுகளிலேயே ‘அண்ணாமலை’ போன்ற ஒரு பெரிய நட்சத்திரப் படத்தின் இசைப் பொறுப்பை ஏற்றார். அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது மட்டுமல்ல; அதற்குத் தகுதியானவர் என்பதைத் தனது இசையின் மூலம் நிரூபித்தார். ரஜினிகாந்தின் திரை ஆளுமைக்கு ஏற்ற ஓர் இசை மொழியை உருவாக்கியதோடு, அந்த மொழி ரசிகர்களின் நினைவில் நீண்டகாலம் நிலைத்திருக்கவும் செய்தார்.

தேவாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று, அவர் வெகுஜன இசையை எளிதாக மக்களிடம் கொண்டுசேர்த்த விதம். சென்னையின் தெருக்கள், அங்குள்ள மக்களின் பேச்சு மொழி, கொண்டாட்டங்கள், காதல், துயரம், உழைப்பு, நகைச்சுவை என அன்றாட வாழ்க்கையின் பல்வேறு கூறுகளும் அவரது இசையில் இடம்பிடித்தன. இசை என்பது உயர்ந்த மேடைகளில் மட்டுமே நிகழும் கலை அல்ல; தேநீர்க் கடைகளிலும் பேருந்துகளிலும் தெருமுனைகளிலும் ஒலிக்க வேண்டிய ஒன்று என்பதுபோல அவரது பாடல்கள் மக்களிடம் சென்றடைந்தன.

இதன் உச்சமான வெளிப்பாடுகளில் ஒன்று கானா இசை. சென்னையின் உழைக்கும் மக்களின் வாழ்வோடும் நகர்ப்புறப் பண்பாட்டோடும் நெருக்கமாக இருந்த கானா இசையை, திரைப்படங்களின் வழியாகப் பரந்த ரசிகர் வட்டத்துக்கு அறிமுகப்படுத்தினார் தேவா. ஆனால், அவரை கானா இசையமைப்பாளர் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடைத்துவிட முடியாது. மென்மையான காதல் பாடல்களையும், நினைவில் தங்கும் மெட்டுகளையும், கதையின் உணர்வுகளுக்கு வலுசேர்க்கும் பின்னணி இசையையும் உருவாக்கியவர் அவர். ஒருபுறம் தெருவின் துள்ளல்; இன்னொருபுறம் காதலின் மென்மை. இந்த இரண்டையும் ஒரே இசையமைப்பாளரால் கையாள முடிந்தது என்பதே தேவாவின் தனித்துவம்.

தேவா வெறும் வணிகப் படங்களுக்கான இசையைத்தான் உருவாக்குகிறார் என்று நினைத்தவர்களுக்கு, ‘அண்ணாமலை’ படத்தின் பாடல்களில் இடம்பெற்ற இசைச் சோதனைகளும் ஆச்சரியத்தை அளித்தன. குறிப்பாக, “அண்ணாமலை... அண்ணாமலை...” பாடலின் தொடக்கத்தில் சிம்பொனி இசையின் தன்மைகளைத் தமிழ் சினிமாவின் டூயட் பாடல் வடிவத்துடன் இணைத்த விதம் கவனிக்கத்தக்கது. மேற்கத்திய இசையின் ஒலியமைப்பையும் தமிழ் மெட்டின் இயல்பையும் முரண்பாடின்றி ஒன்றிணைத்து, தனக்கான இசை மொழியை உருவாக்கினார். வெகுஜன இசை என்றால் எளிமையானது; அதில் நுட்பங்களுக்கோ சோதனைகளுக்கோ இடமில்லை என்ற எண்ணத்தை அவரது இசை கேள்விக்குள்ளாக்கியது.

தேவாவின் இசைப் பயணத்தில் ‘சூரியன்’, ‘பாட்ஷா’ ஆகிய படங்கள் அடுத்தடுத்த முக்கியமான மைல்கற்கள். ‘பாட்ஷா’வின் இசை, தேவாவின் இசைப் பயணத்தில் உச்ச நிலை. பாடல்களும் பின்னணி இசையும் தனித்தனியாக நினைவில் நிற்பதோடு, ஒன்றிணைந்து படத்தின் மொத்த அனுபவத்தையும் வலுப்படுத்தின. இன்றும் பாட்ஷா பாடல்களும் பின்னணி இசையும் பலருக்கு மனப்பாடம்.

தேவா வெறும் தேவா அல்ல; ஒரு காலகட்டத்தின் இசை நினைவுகளின் பெயர். அவரது பாடல்களை நினைவுகூரும்போது, 90-களின் தமிழ் சினிமாவையும், அன்றைய ரசிகர்களின் உற்சாகத்தையும், ரஜினிகாந்தின் திரை அறிமுக இசைக்காகத் திரையரங்குகளில் எழுந்த ஆரவாரத்தையும், சென்னையின் தெருக்களில் ஒலித்த கானாவையும் சேர்த்தே நினைவுகூர வேண்டியிருக்கிறது. ரஜினியின் பெயர் திரையில் தோன்றும்போது ஒலிக்கும் அந்த இசையிலும், பாட்ஷாவின் பின்னணி இசையிலும், கானாவின் துள்ளலிலும், காதல் பாடல்களின் மென்மையிலும் தேவா தொடர்ந்து நம்முடன் இருப்பார். தேனிசைத் தென்றல் மறைந்துவிட்டார். ஆனால், அவர் இசைத் தென்றல் நின்றுவிடப் போவதில்லை.

- அஜயன்பாலா, திரைப்பட இயக்குநர்/எழுத்தாளர்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT