படங்கள்: நா.தங்கரத்தினம்

 
தமிழ் சினிமா

தேனியில் பாரதிராஜா உடலுக்கு பிரபலங்கள், தென் மாவட்ட ரசிகர்கள் திரண்டு அஞ்சலி

என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம்: ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடல் இன்னும் சில மணி நேரங்களில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக குழி தோண்டப்பட்டு, உதிரிப்பூக்கள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திரைப் பிரபலங்களும், தென்மாவட்ட ரசிகர்களும் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உடல் நலக்குறைவால் நேற்று (ஜூன் 10) சென்னையில் உயிரிழந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல் இன்று காலை தேனி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டது. சாலை மார்க்கமாக வந்த அவரது உடல் காலை 6.30மணிக்கு மாவட்ட எல்லையான கொடைக்கானல் சாலை பிரிவில் (காட் ரோடு) உள்ள அவரது பண்ணை வீட்டில் வைக்கப்பட்டது. ஏராளமான ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அஞ்சலி செலுத்தியவர்கள்:

நடிகைகள் சுகாசினி, ராதிகா, நிரோஷா, கவிஞர்கள் வைரமுத்து, சினேகன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியகுழு உறுப்பினர் கே.பாலபாரதி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் உதயகுமார், முன்னாள் எம்எல்ஏ.மகேந்திரன், நடிகர்கள் நிழல்கள்ரவி, சமுத்திரக்கனி, கருணாஸ்,விக்னேஷ், லட்சுமன், இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, ராம், பேரரசு, ரத்தினகுமார், சீமான்,பொன்ராம், வெற்றிமாறன்,ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், நடிகர்கள் வடிவேலு, இளவரசு, ஜோ மல்லூரி, திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ.சரவணன்,கிராமிய பாடகர்கள் ராஜலட்சுமி, செந்தில்கணேஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

டிஐஜி சசிமோகன் தலைமையில் தேனி எஸ் பி சினேஹபிரியா, திண்டுக்கல் எஸ்பி பிரதீப் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரசிகர்கள் மற்றும் விஜபிக்களுக்கு தனித்தனியே வரிசை ஏற்படுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று மாலை 3 மணிக்கு அடக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதால் இதற்கான ஏற்பாடுகள் த ற்போது தொடங்கி உள்ளது. இதற்காக பண்ணை வீட்டு வளாகத்தின் முகப்பில் குழிதோணடப்பட்டு அவரது உடல் ரசிகர்களின் பார்வைக்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக உதிரிப்பூக்கள் அப்பகுதியில் தூவப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன. தொடர்ந்து காவல்துறை மரியாதைக்கான ஒத்திகை பார்க்கப்பட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தெனமாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கணகலங்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மூச்சுத் திணறலால் சிரமப்பட்ட வடிவேல்

மூச்சுத் திணறலால் சிரமப்பட்ட நடிகர் வடிவேல் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். பின்னால் தொடர்ந்து சென்ற செய்தியாளர்கள் பேட்டி எடுப்பதில் முனைப்பு காட்டினர். பேசத்திணறிய வடிவேலு, ஒருகட்டத்தில் சாலை ஓரத்தில் அடைக்கப்பட்டிருந்த ஹோட்டல் முன்பு அமர்ந்து கொண்டார். பொதுமக்கள் , ரசிகர்கள் பலரும் அவரைக்கான திரண்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. அரைமணி நேர ஓய்வுக்குப் பிறகு பின்பு மீண்டும் அஞ்சலி செலுத்தும் இடத்துக்கு அவர் வந்தார்.

SCROLL FOR NEXT