‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றவரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ என்ற படம் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். கே.சி. குரு இயக்கும் இப்படத்தில் ஃபிட்னஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா நாயகியாக நடிக்கிறார்.
பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகும் இதை, ஹிதா ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. சாகர் சந்தேஷ் - ஜி.திம்மா ரெட்டி இணை தயாரிப்பு செய்கின்றனர். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் விக்கல்ஸ் விக்ரம் கூறும்போது, ‘‘2016-ம் ஆண்டில் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். பிறகு சோசியல் மீடியாவில் பிரபலமானேன். பிக் பாஸ் மூலம் இன்னும் பிரபலமடைந்தேன். அதன் மூலம் இந்தப் பட வாய்ப்புக் கிடைத்தது. எனக்கு இப்படத்தின் இயக்குநரைச் சமீபத்தில் தான் தெரியும்.
அவர் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் கதையைச் சொன்னதும் பிடித்துப் போனது. இப்படத்தின் போஸ்டரில் மைக் இருக்கிறது, ஸ்டாண்ட் இருக்கிறது, அப்புறம் அதில் வெயிட் இருக்கிறது. இது லவ் ஸ்டோரி. ஸ்டாண்ட் அப் காமெடியனுக்கும் பெண் பாடி பில்டருக்கும் இடையிலான கதைதான் படம். அதனால் தான் நான் இதில் ஹீரோவாகி இருக்கிறேன்” என்றார்.