நயன்தாரா, கவின், பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘ஹாய்’. விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ், ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளன. ஆக. 28-ம் தேதி வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, கவின் பேசும்போது, ‘‘இந்தப் படத்துக்கு கிடைத்த ஆதரவு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வைத் தந்துள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் சிரித்து, மகிழ்ந்து, சில காட்சிகளில் உணர்ச்சிவசப்பட்டு ரசிப்பதைப் பார்க்கும்போது, நாங்கள் நினைத்த நோக்கம் நிறைவேறிய திருப்தி கிடைக்கிறது. குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து, கவலைகளை மறந்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தை உருவாக்கினோம்.
நான் எப்போதும் இலக்கை அடைவதைவிட, அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் முக்கியம் என்று நம்புவேன். ஒரு படம் வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா என்பது ஒரு கட்டம் மட்டுமே. ஆனால், அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், நமக்காக நிற்பவர்கள், நமக்கு ஆதரவாக இருப்பவர்கள்தான் வாழ்க்கை முழுவதும் நம்முடன் வரும் உண்மையான பலம். அந்த வகையில் ‘ஹாய்’ படத்தின் பயணம் எனக்கு அழகான அனுபவம்.
ஹாய் கதையைக் கேட்டதும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் இயக்குநர் நினைத்த நடிகர்களே நடிக்க வேண்டும் என்று சொன்னேன். ராதிகா மேடம், பிரபு சார், சுஹாசினி மேடம், பாக்யராஜ் சார் என ஒவ்வொருவரையும் தாண்டி வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரங்களில் கற்பனை செய்ய முடியவில்லை. இன்று அந்தக் குழுவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இந்தப் படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.