தமிழ் சினிமா

‘பராசக்தி’ வரையிலான திரைப் பயணமும், நிகழ்ந்த மாற்றமும்: சுதா கொங்கரா விவரிப்பு

ஸ்டார்க்கர்

‘பராசக்தி’ எப்போது வெளியீடு என்ற கேள்விக்கு இயக்குநர் சுதா கொங்கரா பதிலளித்துள்ளார். மேலும், இயக்குநர்களில் ஆண் - பெண் என்றெல்லாம் இப்போது பார்ப்பதில்லை என்றார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

‘பராசக்தி’ படத்தில் உபயோகித்த பொருட்களை வைத்து சென்னையில் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. இதனை காண மக்கள் அதிகப்படியாக வந்து கொண்டிருப்பதால் டிசம்பர் 25-ம் தேதி வரை நீட்டித்திருக்கிறார்கள். இந்தக் கண்காட்சியைக் காண வந்த இயக்குநர் சுதா கொங்கரா பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதில் சுதா கொங்கரா பேசியபோது, “‘பராசக்தி’ எப்போது வெளியாகும் என்பதை கூடிய விரைவில் தயாரிப்பாளர் தெரிவிப்பார். என்னிடம் கேட்டால் ‘பொங்கல் வெளியீடு’ என்பதுதான் பதில்.

இயக்குநர்களில் ஆண் - பெண் என்றெல்லாம் இப்போது பார்ப்பதில்லை. ஃபாரா கான் எப்போதோ பெரிய பட்ஜெட் படங்களை எல்லாம் இயக்கிவிட்டார். இப்போது அனைவருமே இயக்குநர் என்ற ரீதியில் மட்டுமே பார்க்கிறார்கள். அந்தளவுக்கு திரையுலகம் இப்போது மாறியிருக்கிறது. அப்படி மாறவில்லை என்றால் அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

திரையுலகில் கஷ்டங்கள் இருக்கிறது. ஆனால், நாம் முன்னால் அடி எடுத்துவைத்து பயணிக்க வேண்டும். அப்படி பயணித்தால் மட்டுமே நம்மை பின்தொடர்ந்து பலரும் வருவார்கள். ஆனால், ஆண் - பெண் என்ற பார்வை இப்போது இல்லை என்பதே என் கருத்து.

முன்பு என்னால் ஒரு பெரிய நாயகரை அணுகி கதை சொல்ல முடியாத சூழல் இருந்தது. இப்போது அனைத்து மொழிகளில் இருந்தும் என்னை பெரிய நாயகர்கள் படம் பண்ணலாமா என்று கேட்கிறார்கள்.

பெண்கள் என்றாலே சின்ன படங்கள்தான் எடுப்பார்கள் என்பதெல்லாம் உடைந்துவிட்டது. ‘சூரரைப் போற்று’, ‘இறுதிச்சுற்று’ மற்றும் ‘பராசக்தி’ உள்ளிட்ட படங்களை ஒரு சாதனையாக பார்க்கவில்லை. அது ஒரு பயணம் அவ்வளவே. அதன் மூலம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஒரு சாதனையாக பார்க்கிறேன். அது எனக்கு பிடித்திருக்கிறது” என்று பேசினார் சுதா கொங்காரா.

SCROLL FOR NEXT