தமிழ் சினிமா

“டைரக்டர் கொடுக்கிற பாராட்டே விருதுதான்” - சுவாசிகா நேர்காணல்

செ. ஏக்நாத்ராஜ்

கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சிக் கிராமம் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்த மலையாள நடிகையான சுவாசிகா, ‘லப்பர் பந்து’-க்குப் பிறகு பிஸியான குணசித்திர நடிகையாக மாறியிருக்கிறார். “என்னோட 16 வயசுல நடிக்கத் தொடங்கினேன். தமிழ்ல சில படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். அப்புறம் மலையாளத்துல நிறைய படங்கள்ல நடிச்சேன். ‘லப்பர் பந்து’-க்குப் பிறகு தமிழ், தெலுங்குலயும் பிஸியாயிருக்கேன். அதனால 2-வது இன்னிங்ஸ்னு சொல்லலாம்” என்கிறார் சுவாசிகா.

இயக்குநர் சசியின் ‘நூறு சாமி’ உங்களைச் சுற்றி நடக்கிற கதையாமே?

ஆமா. ‘லப்பர் பந்து’ படம் முடிஞ்சு ஷோ போடும்போது, இயக்குநர் சசி படம் பார்த்துட்டு, ‘நல்லா நடிச்சிருக்கீங்க’ன்னு பாராட்டினார். அப்ப, “நீங்க ஏதும் படம் பண்றீங்கன்னா சொல்லுங்க சார். உங்க இயக்கத்துல நடிக்க தயாரா இருக்கேன்”னு சொன்னேன். அது அதோட முடிஞ்சிருச்சு.

சில மாசங்களுக்குப் பிறகு, “என்கிட்ட இப்படியொரு கதை இருக்கு, சுவாசிகா பண்ணுவாங்களா?”ன்னு ‘லப்பர் பந்து’ இயக்குநர்கிட்ட சசி சார் கேட்டிருக்கார். அவர், “கண்டிப்பா பண்ணுவாங்க”ன்னு சொன்னதுக்குப் பிறகு எனக்கு கால் பண்ணி, கதை சொல்றதுக்காகக் கூப்பிட்டாங்க.

முதல்முறையா அவர் கதை சொல்லும் போதே, அந்த வலுவான கேரக்டர் பிடிச்சிருந்தது. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு கதைன்னா, அதை யார் இயக்குறாங்க அப்படிங்கறது முக்கியம். பூ, பிச்சைக்காரன் உள்பட சசி சாரோட படங்கள் எல்லாமே பார்த்திருக்கேன். முதல் முறையாக அவர் கதை சொல்லும்போதே, நான் ஓகே சொல்லிட்டேன். இந்தப் படத்துல முதல்ல கமிட்டானது நான் தான்.

உங்களை மனசுல வச்சுதான் அந்த கேரக்டரை எழுதினதா இயக்குநர் சொல்லியிருக்கார்...

இருக்கலாம். என்கிட்ட முதன்முதலா கதை சொன்னப்ப இருந்ததை விட, அப்புறம் நிறைய டெவலப் பண்ணி மாத்தினார். அந்த கேரக்டருக்கான விஷயங்கள் எல்லாத்தையும் மறுபடியும் யோசிச்சு, புதுசாவே ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டார். கதையில என்ன மாற்றம் பண்ணினாலும் அதை எல்லாமே என்கிட்ட சொல்லிருவார்.

பெரிய டைரக்டர் அவர், என்கிட்ட சொல்ல தேவையில்லைனாலும் அப்படி சொன்னது பிடிச்சிருந்தது. ‘இப்படி பார்க்கணும், இப்படி சிரிக்கணும், இப்படி நடக்கணும்’னு ஒவ்வொரு நுணுக்கமான விஷயத்தையும் சசி சார் சொல்லுவார். ஒரு ஸ்கிரிப்டோட ஆரம்பத்துல இருந்தே நான் டிராவல் பண்ணினது இந்தப் படத்துலதான். அதனாலயே இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.

உங்களை சாவித்திரினு சொல்லி இருக்காரே, அப்படி என்ன பண்ணியிருக்கீங்க?

ஒரு டைரக்டர் நம்ம வேலைக்கு ஒரு பாராட்டைக் கொடுக்கும்போது, அதுவே விருதுதான். ஏன்னா, அவர்தான் அந்த கதாபாத்திரத்தோட, கதையோட முழுசா வாழ்ந்தவர். அவங்க என்ன ஃபீல் பண்ணினாங்களோ, என்ன நினைச்சு எழுதினாங்களோ, அதை நடிப்புல நாம வெளிப்படுத்தும்போது அவங்க கொடுக்கிற ‘காம்பிளிமென்ட்’ பெரிய விஷயம். சசி சார் அதை சொல்லும்போது ஒரு நடிகையா அதை பெருமையா உணர்றேன்.

தெலுங்குல ஓர் இளம் ஹீரோ படத்துல அம்மாவா நடிக்க மறுத்திருக்கீங்க. இதுல அம்மாவா நடிச்சிருக்கீங்களே?

அம்மா கேரக்டர்னா, அது என்ன பண்ணும்ங்கறது முக்கியம். சும்மா வந்து போகிற அம்மா கேரக்டருக்கு நான் எதுக்கு? அம்மா கேரக்டர் எல்லா படத்துலயும் இருக்கு. சும்மா காபி கொடுத்துட்டு போறது, டிபன் எடுத்து வைக்கிறது, ‘சாப்பிடுங்க’ன்னு பார்மாலிட்டியா ஒரு வசனம் பேசிட்டு போற மாதிரி கதைகள்ல நடிக்க எனக்கு உடன்பாடில்லை.

எனக்கு ஒரு 55 வயசாகும்போது அதுபோன்ற கேரக்டர்கள்ல நடிக்கலாம். இப்ப எதுக்கு? எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள்ல நடிக்க முடியும்ங்கற நம்பிக்கை இருக்கு. அதனால சும்மா வந்து போகிற அம்மா கேரக்டர்களை பண்ண வேண்டாம்னு தவிர்த்தேன்.

உங்க வயசு குறைவுதான்; ஆனா அம்மா கதாபாத்திரங்களாகவே தொடர்ந்து வருதே..?

சினிமாவுல காலம் காலமாக இருக்கிற விஷயம்தானே இது. பெண்கள் ஒரு படத்துல ஒரு கேரக்டர் பண்ணினா, அதே போல கதாபாத்திரங்களாகவே தொடர்ந்து அவங்களுக்கு வரும். நடிகர்களுக்கு அப்படி வர்றதில்லை. ஆனா, எனக்கு கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைக்குது.

‘லப்பர் பந்து’ படத்துல அம்மா, மாமியாரா நடிக்கும்போது, அதுபோல வாய்ப்புகளாக வரும்னு நினைச்சேன். ஆனா, அடுத்த (மாமன்) படத்துல அக்காவா புரமோஷன் கிடைச்சது. ‘நூறு சாமி’யில முதன்மை பாத்திரத்துல நடிச்சிருக்கேன். அடுத்தடுத்த படங்கள்ல மாடர்னா, போலீஸ் அதிகாரியா, தாசில்தார், வழக்கறிஞர், கொஞ்சம் எதிர்மறை வேடம் மாதிரியான கதாபாத்திரங்களும் வந்துட்டு இருக்கு. ஒரு நடிகையா அதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

அடுத்து?

தெலுங்குல துல்கர் சல்மான் நடிக்கிற ‘ஆகாசம்லா ஒக்க தாரா’, ரவி தேஜாவோட ‘இரு முடி’, பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கிற படம், மாரி செல்வராஜ் தயாரிப்புல ஒரு படம்னு போயிட்டிருக்கு.

- செ.ஏக்நாத்ராஜ் egnathraj.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT