‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்துக்கு காட்சிகளும், வசூலும் அதிகரித்து வருவதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’. ’ஜனநாயகன்’ வெளியாகாத காரணத்தினால் ஜனவரி 15-ம் தேதி வெளியானது. இப்படத்தின் காமெடி காட்சிகள், கதைக்களம் புதிதாக இருந்ததால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இதனால் முதல் நாளை விட இரண்டு மடங்கு இரண்டாம் நாள் வசூல் கிடைத்திருக்கிறது. மேலும், திரையிடப்படும் திரையரங்குகள் அனைத்துமே ஹவுஸ்ஃபுல்லாகி வருகின்றன. இதனால் 2026-ம் ஆண்டின் முதல் வசூல் ரீதியான வெற்றி படம் என்ற நிலையை ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் அடையும் சூழல் உறுதியாகி இருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்த வரவேற்பு குறித்து ஜீவா தனது எக்ஸ் தளத்தில், “என் அன்பான மக்கள் அனைவருக்கும், ‘தலைவர் தம்பி தலைமையில்’ மீது நீங்கள் பொழிந்த அளவற்ற அன்பு மற்றும் பாசத்தால் உண்மையிலேயே நெகிழ்ந்து போய் இருக்கிறேன். ஒவ்வொரு செய்தியும், விமர்சனமும் என்னை உற்சாகமாக்கி உள்ளது. மேலும், என்னைப் பற்றிய மீம்களுக்கும் கூட. அவை அன்புடனும் ஆதரவுடனும் வந்துள்ளன.
மேலும் அவை இந்த பயணத்தை இன்னும் சிறப்பானதாக ஆக்கியுள்ளன. படம் பார்க்கும், பார்க்கப் போகும் அனைத்துக் கண்களுக்கும், என் நன்றிகள். நிபந்தனைகளைப் பின்பற்றி ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தினை திரையரங்குகளில் மட்டும் கண்டு மகிழுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.