இன்செப்ஷன்
சினிமா, நதி போல ஓடிக்கொண்டிருக்கும்போது, திடீரென நீர்வீழ்ச்சி குறுக்கிட்டால் எப்படி இருக்கும்? அதுதான் ஸ்மாஷ் கட் (Smash Cut). ஒரு காட்சி மெதுவாகவோ, அமைதியாகவோ போய்க் கொண்டிருக்கும்போது, எவ்வித முன்னறி விப்புமின்றி முற்றிலும் மாறுபட்ட, சத்தமான அல்லது வேகமான ஒரு காட்சிக்குத் தாவுவதே இந்த நுட்பம். இது பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கவும், கதையில் பெரியமாற்றத்தை உணர்த்தவும் பயன்படுத்தப்படுகிறது.
முரண்பாடுகளின் விளையாட்டு
ஸ்மாஷ் கட் என்பது முரண்பாடுகளை (கான்ட்ராஸ்ட்) அடிப்படையாகக் கொண்டது. இது இரண்டு வெவ்வேறான உணர்ச்சிகளை அல்லது சூழல்களை நேருக்கு நேர் மோதவிடுகிறது. அமைதியிலிருந்து ஆரவாரம் (சைலண்ட் டு ப்ளாஸ்ட் ஆஃப் சவுண்ட்): ஒரு கதாபாத்திரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் சூழலிலிருந்து, திடீரென ஓர் அலாரத்தின் சத்தத்துக்கோ அல்லது போர்க்களத்தின் இரைச்சலுக்கோ மாறுவது.
நிசப்தத்திலிருந்து உரத்த சத்தம் (க்ரேக்கீசவுண்ட்): அறையில் அமைதி நிலவும்போது, திடீரென ஒலிக்கும் பதற்றமான குரலோ ஏதேனும் ஒரு கண்ணாடி உடையும் சத்தமோ, துப்பாக்கி வெடிக்கும் சத்தமோ ஒரு ஸ்மாஷ் கட் மூலம் காட்டப்படும்போது அதன் தாக்கம் பல மடங்கு அதிகமாகும்.
நிழலிலிருந்து ஒளி (டார்க் டு பிரைட்): இருண்ட அறையிலிருந்து திடீரென பிரகாசமான சூரிய ஒளி வீசும் கடற்கரைக்குக் காட்சியை மாற்றுவது.
அசைவற்ற நிலையிலிருந்து இயக்கம்: ஒளிப்பதிவில் ஒரு நிலையான ஷாட் மற்றும் வேகமான இயக்க ஷாட் (Movement Shot) ஆகியவற்றுக்கு இடையிலான ஸ்மாஷ் கட் தனித்துவமான மொழியைக் கொண்டது.
ஸ்டேடிக் டு மோஷன் - ஒரு கதாபாத்திரம் சிலையாக அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் நிலையான காட்சியிலிருந்து, அடுத்த நொடியே அவர் ஒரு ரயிலில் வேகமாகப் பயணிப்பது போன்ற காட்சிக்கு மாறுவது. இது கால மாற்றத்தை அல்லது அந்த கதாபாத்திரத்தின் மனவேகத்தைக் குறிக்கும்.
மோஷன் டு ஸ்டேடிக் - அதிவேகமான துரத்தல் காட்சி நடந்து கொண்டிருக்கும்போது, நேர்மாறாக ஓர் அமைதியான நூலகத்தில் அந்த கதாபாத்திரம் மூச்சிரைக்க அமர்ந்திருப்பது போன்ற காட்சிக்கு மாறுவது. இது அந்தத் துரத்தலின் முடிவை அதிரடியாக உணர்த்தும்.
அகிரா குரசோவா: ஸ்மாஷ் கட்டின் பிதாமகன்
ஜப்பானிய மாஸ்டர் அகிரா குரோசாவா தனது படங்களில் இந்த முரண்பாடுகளை மிகச்சிறப்பாகக் கையாண்டவர். அவரது ‘செவன் சாமுராய்’ படத்தில், மழையில் நடக்கும் மிகத் தீவிரமான சண்டைக் காட்சிகளுக்கிடையே திடீரென நிசப்தமான, அசைவற்ற காட்சியைக் கொண்டு வருவார்.
இயற்கையின் சீற்றத்தையும் (காற்று, மழை), மனிதனின் மவுனத்தையும் அவர் ஸ்மாஷ் கட் மூலம் இணைப்பார். ஒரு காட்சியின் வேகத்தை திடீரெனக் குறைப்பதன் மூலம் அந்த மரணத்தின் கனத்தை அவர் பார்வையாளர்களுக்குக் கடத்துவார்.
ஹாலிவுட் சினிமா உதாரணங்கள்
ஹாலிவுட் படங்களில் ஸ்மாஷ் கட் என்பது ஒரு ‘ஜம்ப் ஸ்கேர்’ ஆகவோ அல்லது நகைச்சுவைக்காகவோ அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
எக்லிஸ்...
நகைச்சுவையில்: ஒரு கதாபாத்திரம் “நான் கண்டிப்பாக அந்த இடத்துக்குப் போகவே மாட்டேன்” என்று உறுதியாகச் சொல்லும்போதே, அடுத்த காட்சியில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக நிற்பதைக் காட்டுவது.
திகில் படங்களில்: ஒரு கதாபாத்திரம் இருட்டில் மெதுவாக நடந்து செல்லும் போது, எவ்வித இசையுமின்றி நிலவும் அமைதியை உடைத்துக்கொண்டு ஒரு பேய் தோன்றுவது.
இன்செப்ஷன்: கிறிஸ்டோபர் நோலன் தனது படங்களில் கனவுக்கும் நிஜத்துக்கு இடையிலான மாற்றத்தை ஸ்மாஷ் கட் மூலம் அதிரடியாகக் காட்டுவார். ஒரு கதாபாத்திரம் தண்ணீரில் விழுந்ததும், அடுத்த நொடி அவர் ஓர் அறையில் திடுக்கிட்டு எழுவது மிகச்சிறந்த உதாரணம்.
இத்தாலிய சினிமா
குறிப்பாக அதன் நியோ-ரியலிசம் மற்றும் அதன் பிறகு வந்த மாடர்னிஸ்ட் அலைகளில், ‘ஸ்மாஷ் கட்’ நுட்பத்தை ஒரு எடிட்டிங் கருவியாக மட்டும் பார்க்காமல், சமூக மற்றும் உளவியல் மாற்றத்தின் குறியீடாகப் பயன்படுத்தியது.
மைக்கலேஞ்சலோ அந்தோனியோனி தனது படங்களில் ‘அந்நியப்படுதல்’ (Alienation) என்ற கருப்பொருளை அதிகம் கையாளுவார். L’Eclisse (1962) திரைப்படத்தின் இறுதியில், கதையின் நாயகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தருணத்தில், திடீரென அந்த இடத்தின் அசைவற்ற பொருட்களை (Objects), கட்டிடங்களை ஒரு ஸ்மாஷ் கட் மூலம் காட்டுவார்.
இது மனித உறவுகளின் முறிவையும், ஜடப்பொருட்களின் ஆதிக்கத்தையும் பார்வையாளருக்கு அதிர்ச்சியாகக் கடத்தும். ஃபெடரிகோ ஃபெலினி, தனது படங்களில் நிஜத்துக்கும் கனவுக்கும் இடையிலான எல்லையை உடைக்க ஸ்மாஷ் கட்டைப் பயன்படுத்தினார்.
8½ (எயிட் அண்ட் எ ஹாஃப்) கதாபாத்திரம் ஒரு சாதாரண அறையில் பேசிக்கொண்டிருக்கும்போதே, அடுத்த நொடி அவர் அந்தரத்தில் பறப்பது போன்றோ அல்லது விசித்திரமான திருவிழாவிற்குள்ளோ (Surrealism) ஸ்மாஷ் கட் மூலம் தூக்கி எறியப்படுவார்.
இது ஒரு கலைஞனின் குழப்பமான மனநிலையை விவரிக்கப் பயன்பட்டது. மற்றொரு இத்தாலிய இயக்குநர் பியர் பாவ்லோ பசோலினி, தனது படங்களில் வறுமையையும், புனிதத்தையும் ஒப்பிட்டுக் காட்ட ஸ்மாஷ் கட்டைப் பயன்படுத்தினார். அழுக்கான குடிசைப்பகுதியிலிருந்து திடீரென ஓர் அழகான ஓவியம் போன்ற காட்சிக்கு மாறுவது, அவர் சொல்ல வந்த வர்க்க முரண்பாடுகளை அழுத்தமாகப் பதிய வைத்தது.
ஒளிப்பதிவாளர் மற்றும் சவுண்ட் டிசைனரின் ஒருங்கிணைப்பு
சிறந்த ஸ்மாஷ் கட் உருவாக ஒளிப்பதிவாளரும் சவுண்ட் டிசைனரும் கைகோர்க்க வேண்டும்.
ஒளிப்பதிவாளர்: லுக் ரூம் மற்றும் நெகட்டிவ் ஸ்பேஸை முற்றிலும் மாற்றி அமைப்பதன் மூலம் காட்சி அதிர்ச்சியை உருவாக்கலாம். ஒரு ஷாட்டில் கதாபாத்திரம் வலது பக்கம் பார்த்துக் கொண்டிருந்தால், அடுத்த ஸ்மாஷ் கட் ஷாட்டில் அவர் இடது பக்கம் பார்த்திருப்பது போன்ற ‘டிஸ்-ஓரியண்டேஷன்’ (Disorientation) நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
சத்தம்: காட்சியின் மாற்றத்துக்கு ஒரு மில்லி செகண்ட் முன்னதாகவே சத்தத்தைத் தொடங்கி (J-Cut) அல்லது காட்சி மாறியதும் திடீரெனச் சத்தத்தை நிறுத்தி (L-Cut) ஸ்மாஷ் கட்டின் தீவிரத்தை அதிகரிக்கலாம்.
எப்போது பயன்படுத்த வேண்டும்?
கனவிலிருந்து விழிப்பு : இதுவே மிகவும் பொதுவான பயன்பாடு. கால மாற்றம் (எலிப்டிக்கல் எடிட்டிங்): தேவையற்ற இடைவெளிகளைத் தவிர்த்து கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த.
உணர்ச்சி மாற்றம்: ஒரு மகிழ்ச்சியான தருணத்திலிருந்து திடீரென துயரமான செய்தி வரும்போது.
சினிமாவின் துடிப்பு
புரொஃபைல் ஷாட்கள் முகத்தின் ரகசியத்தைப் பேசுகின்றன, ‘கட்டிங் ஆன் ஆக் ஷன்’ காட்சிகளின் ஓட்டத்தை உறுதி செய்கிறது. ஆனால், ஸ்மாஷ் கட் என்பது சினிமாவின் இதயத்துடிப்பு போன்றது. அது பார்வையாளரை உறங்கவிடாமல் செய்கிறது.
“சினிமா என்பது 24 பிரேம்களில் சொல்லப்படும் உண்மை” என்பார்கள். அந்த உண்மையை உரக்கச் சொல்லவும், மவுனமாகச் சொல்லவும் இந்த ஸ்மாஷ் கட் எனும் அதிரடி நுட்பம் அவசியமாகிறது.
தேவர் மகனின் நுணுக்கமான புரொஃபைல் ஷாட்களும், குரசோவாவின் அதிரடி மாற்றங்களும் சேர்ந்ததுதான் சினிமா எனும் பேராச்சரியம். ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் இந்த நுட்பங்களைப் புரிந்துகொள்வது, ஒரு கதையை வெறும் காட்சிகளாக இல்லாமல் ஓர் அனுபவமாக மாற்ற உதவும்.
(புதன் தோறும் ஒளிகாட்டுவோம்)
- cjrdop@gmail.com