நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
‘சேயோன்’ படத்துக்குப் பிறகு, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பதாக இருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால், அப்படத்தின் பொருட்செலவு பெரிதாக இருந்ததால், அதன் தயாரிப்பு பொறுப்பில் இருந்து விலகியது சத்யஜோதி நிறுவனம். தற்போது வெங்கட்பிரபு படத்துக்கு பதிலாக ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் படத்தினை தயாரிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினார் சிவகார்த்திகேயன்.
இந்தப் பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது அதில் சுமுக முடிவுகள் எட்டப்பட்டு, சத்யஜோதி நிறுவனம் – சிவகார்த்திகேயன் – ராம்குமார் கூட்டணி உறுதியாகி இருக்கிறது. ‘சேயோன்’ படத்தினை முடித்துவிட்டு, இதற்கு தான் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என தெரிகிறது.
‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் கதையில் சிம்பு நடிப்பதாக பூஜை போடப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டணியில் ஏற்பட்ட சிக்கலால் இப்படம் கைவிடப்பட்டது. தற்போது அக்கதையில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.