மிஷ்கின் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையிடம் தனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை என சாவித்திரி சொல்வதில் தொடங்குகிறது 2.34 நிமிடங்கள் ஓடும் ட்ரெய்லர். அவரின் விருப்பத்துக்கு மாறாக அதே மாப்பிள்ளையுடன் திருமணம் நடக்க தாமரை இலை தண்ணீராய் அவர்கள் வாழ்க்கை காட்டப்படுகிறது. விரும்பாத வாழ்க்கை என்றாலும் தனது வேடிக்கையான சுபாவத்தால் அதை கடந்து செல்கிறாள் வழக்கறிஞர் சாவித்திரி.
இந்த நிலையில் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண்ணின் கொடூரக் கொலையில் சாவித்திரியின் கணவன் குற்றவாளி ஆக்கப்படுகிறான். அவ்வழக்கில் இருந்து அவனைக் காப்பாற்ற தானே களமிறங்குகிறாள் சாவித்திரி. விருப்பமில்லாத கணவனின் விடுதலைக்காக தனது சீனியரையே எதிர்த்து நிற்கிறாள்.
ஆரம்பத்தில் கலகலப்பாகவும், பின்பு மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் வாதங்களால் காரசாரமாகவும் நகரும் ட்ரெய்லர், சாவித்திரி தனது கணவனை மீட்டாளா என்ற கேள்வியை முன் வைத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது.
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கியுள்ள படம் ‘சத்தியவான் சாவித்திரி’. இந்தப் படத்தில் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், சாருகேஷ், பாலசரவணன், ஷில்பா மஞ்சுநாத், மதுசூதனன், ஆர்.சுந்தரராஜன், பிரிகிடா, மாலா பார்வதி மற்றும் ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து, டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவையும், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். இந்தப் படம் நவம்பர் 20 அன்று திரைக்கு வருகிறது.