இனி வரும் காலங்களிலும் திமுகவுக்கே ஆதரவு என்று சத்யராஜ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார். அதற்கான விஷயங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தொடக்கத்தில் இருந்தே திமுகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருபவர் சத்யராஜ்.
தற்போது தமிழக முதல்வராக விஜய் பதவியேற்க உள்ள நிலையில் சத்யராஜ் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “தவெக தலைவர் விஜய்க்கும், அவருடைய தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுடைய கொள்கை தலைவர்கள் பெரியார், அம்பேத்கர் என விஜய் கூறுகிறார்கள். அவர்கள் வழிநின்று ஒரு சமூக நீதி ஆட்சியை தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எனது நண்பர் திமுக தலைவர் ஸ்டாலினின் தோல்வி எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. ஆனால், அவர் தோல்வியை கண்டு துவண்டு விடுபவர் அல்ல.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு டெல்லிக்கு அஞ்சாமல் நின்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்து இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது. அதற்கு என் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசுக்கு ஸ்டாலினுக்கும் ஆதரவாக இருந்தேன். இனி வரும் காலங்களிலும் திமுக அரசுக்கும், ஸ்டாலினுக்கும் எனது ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும் பெருமையோடும், மனஉறுதியோடும், மன மகிழ்ச்சியோடும் கூறிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.