திரைப்படத்தில் ஒரு காட்சியின் வெற்றி என்பது பெரும்பாலும் ஒளியமைப்பைச் சார்ந்துள்ளது. கதாபாத்திரத்தின் முகத்தில் விழும் ஒளி, ஓர் அறையின் சூழல், சூரிய உதயத்தின் உணர்வு, மழை இரவின் மர்மம் அல்லது போர்க்களத்தின் பதற்றம் - இவை அனைத்தையும் நடைமுறையில் உருவாக்கும் நபர்தான் கேஃபர் (Gaffer).
திரைப்படத் துறையில் கேஃபர் என்பவர், லைட் டெக்னீஷியன் மட்டுமல்ல. அவர் தலைமை ஒளியமைப்பு நிபுணராவார் (Chief Lighting Technician). ஒளிப்பதிவாளரின் கலைக் கற்பனையை நடைமுறைப்படுத்தும் முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர். கேமரா, ஒளியை பதிவு செய்கிறது; ஆனால் அந்த ஒளியை உருவாக்கும் பொறுப்பு கேஃபருடையது.
கேஃபர் யார்?
“இந்தக் காட்சி மாலை சூரிய ஒளியைப் போல இருக்க வேண்டும்” என்றோ அல்லது ‘இங்கே கதாபாத்திரம் தனிமையாக உணரப்பட வேண்டும்’ என்றோ ஒளிப்பதிவாளர் சொல்லும்போது,அந்த உணர்வை உருவாக்க, எந்த ஒளிவிளக்கைப் பயன்படுத்த வேண்டும்? அதனை எவ்வளவு உயரத்தில் வைக்க வேண்டும்? எந்த கோணத்தில் ஒளியை செலுத்த வேண்டும்? எவ்வளவு மின்சாரம் தேவைப்படும்? எந்த டிஃப்யூஷன் பயன்படுத்த வேண்டும்? என்பது அனைத்தையும் முடிவு செய்வது கேஃபரின் பணி.
அதனால்தான் திரையுலகில் கேஃபர், ஒளிப்பதிவாளரின் வலது கரம் என்று அழைக்கப்படுகிறார்.
கேஃபர் ஆக எப்படி உருவாகிறார்கள்?
திரைப்படப் பள்ளிகளில் “கேஃபர்” என்ற பட்டப்படிப்பு பொதுவாகக் கிடையாது. பெரும்பாலான கேஃபர்கள் தங்கள் வாழ்க்கையை கீழ்மட்டப் பணிகளில் இருந்து தொடங்குகிறார்கள். லைட்மேன்- விளக்குகளைத் தூக்கிச் சுமந்து செல்லுதல், ஸ்டாண்டுகளை அமைத்தல், கேபிள்களை இழுத்தல் போன்ற அடிப்படைப் பணிகளில் முதலில் அனுபவம் பெறுவார்கள்.
லைட்டிங் டெக்னீஷியன்- அதன் பின்னர் விளக்குகள், மின் விநியோகம், டிம்மர்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் ஒளி வடிவமைப்பு பற்றிய தொழில்நுட்ப அறிவைப் பெறுவார்கள். பெஸ்ட் பாய் எலக்ட்ரிக்- கேஃபரின் முக்கிய உதவியாளராகச் செயல்படுவார்கள்.
பல வருட அனுபவத்துக்குப் பிறகு கேஃபர், முழு லைட்டிங் துறையையும் நிர்வகிக்கும் நிலைக்கு உயர்வார்கள். புகழ்பெற்ற பல ஒளிப்பதிவாளர்களும் தங்கள் வாழ்க்கையை லைட்டிங் பிரிவில் தொடங்கி பின்னர் ஒளிப்பதிவாளர்களாக வளர்ந்துள்ளனர்.
ஒளிப்பதிவாளரும் கேஃபரும்
ஒளிப்பதிவாளருக்கும் கேஃபருக்கும் இடையே தனித்துவமான புரிதல் இருக்கும். ஒளிப்பதிவாளர், காட்சியின் உணர்வை விவரிப்பார். ஒளியின் தரத்தை (Light Quality) பற்றிக் கூறுவார். நிழல்களின் தன்மையை விளக்குவார்.
கேஃபர், சரியான ஒளிவிளக்குகளைத் தேர்வு செய்வார். ஒளியின் திசையை நிர்ணயிப்பார். மின் விநியோகத்தை ஏற்பாடு செய்வார், லைட்டிங் குழுவை வழிநடத்துவார். அனுபவமிக்க கேஃபர் பல நேரங்களில், ஒளிப்பதிவாளர் சொல்லும் முன்பே அவருடைய எண்ணத்தைப் புரிந்துகொள்வார்.
கேஃபரின் தொழில்நுட்ப அறிவு
ஒரு சிறந்த கேஃபருக்கு விளக்குகளை இயக்கத் தெரிந்தால் மட்டும் போதாது. எச்.எம்.ஐ விளக்குகள், டங்ஸ்டன் விளக்குகள், எல்.இ.டி விளக்குகள், ஸ்கைபேனல், க்ரீம்சோர்ஸ், அஸ்டேரா டியூப்ஸ், பலூன் லைட்கள், டிஎம்.எக்ஸ் கட்டுப்பாடு, ஜெனரேட்டர் திறன், மின் விநியோகம், ஒளியின் இயல்பு, நிற வெப்பநிலை, பாதுகாப்பு நடைமுறைகள், லைட்டிங் வரைபடங்கள், நவீன எல்.இ.டி அமைப்புகள் போன்ற பல தொழில்நுட்ப அம்சங்கள் குறித்தும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
லொக்கேஷன் ஸ்கவுட்டிங்கில் கேஃபரின் பங்கு படப்பிடிப்புக்கு முன்பே கேஃபர் லொக்கேஷன்களை ஆய்வு செய்வார். ஒளி வரும் திசை எது? எந்த நேரத்தில் நிழல் விழுகிறது? மின்சாரம் கிடைக்குமா? ஜெனரேட்டர் தேவைப்படுமா? கிரேன் லைட்கள் அமைக்க இடம் இருக்கிறதா? போன்ற அம்சங்களை அவர் கவனிப்பார்.
இதனால் படப்பிடிப்பு நாளில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் முன்கூட்டியே தீர்க்கப்படுகின்றன. கலை உணர்வு கொண்ட தொழில்நுட்ப நிபுணர் கேஃபர் ஒரு மின் தொழிலாளி அல்ல. அவருக்கு கலை உணர்வும் அவசியம்.
காதல் காட்சிகளுக்கு - மென்மையான ஒளி, வெப்பமான நிற வெப்பநிலை மற்றும் குறைந்த நிழல்கள், த்ரில்லர் காட்சிகளில்- ஆழமான நிழல்கள், கடினமான ஒளி மற்றும் அதிக கான்ட்ராஸ்ட். ஹாரர் காட்சிகளுக்கு – பின்னொளி, மர்மமான நிழல்கள் மற்றும் ஒற்றை ஒளி மூலங்கள். இத்தகைய உணர்வுகளை நடைமுறையில் உருவாக்கும் திறமை கேஃபருக்கு இருக்க வேண்டும்.
இந்திய சினிமாவில் கேஃபர்களின் பங்கு
பழைய காலங்களில் கார்பன் ஆர்க் விளக்குகள் பயன்படுத்தப்பட்ட காலம் முதல் இன்று எல்.இ.டி மற்றும் வயர்லெஸ் கட்டுப்பாட்டு அமைப்புகள் வரை கேஃபர்கள் தொழில்நுட்ப மாற்றங்களோடு வளர்ந்துள்ளனர்.
பி.சி.ராம், சந்தோஷ் சிவன், ரவி கே. சந்திரன், திரு, ரத்னவேலு போன்ற முன்னணி ஒளிப்பதிவாளர்களின் காட்சிகள் வெற்றி பெறுவதற்கு பின்னால் திறமையான கேஃபர்களின் உழைப்பும் உள்ளது.
கேஃபரின் மதிப்பும் ஊதியமும்
திரைப்படத் துறையில் கேஃபர் மிகவும் உயர்ந்த திறன் கொண்ட தொழில்நுட்ப நிபுணர். பல பெரிய திரைப்படங்களில் 20 முதல் 50 பேர் கொண்ட லைட்டிங் குழுவை ஒருங்கிணைத்து வழிநடத்தும் பொறுப்பையும் அவர் ஏற்கிறார். இதன் காரணமாக அனுபவமிக்க கேஃபர்களின் ஊதியம் மிகவும் உயர்வாக இருக்கும்.
சில நேரங்களில் அவர்கள் பல மூத்த தொழில்நுட்பக் கலைஞர்களையும் விட அதிக ஊதியம் பெறுகின்றனர். ஹாலிவுட்டிலும் பெரிய இந்தியத் திரைப்படங்களிலும், ஒரு முன்னணி கேஃபர் தயாரிப்பாளர்களால் மிகவும் மதிக்கப்படுகிறார்.
பல ஒளிப்பதிவாளர்கள் ஒரு திரைப்படத்துக்கு ஒப்புக்கொள்ளும் முன், கேஃபர் யார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். ஏனெனில், அவர்களின் கற்பனையை நம்பிக்கையுடன் செயல்படுத்தும் நபர் கேஃபர்தான்.
பாதுகாப்பின் காவலர்
ஒரு திரைப்படத் தளத்தில் ஆயிரக்கணக்கான வாட்ஸ் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. கேபிள்கள் பாதுகாப்பாக அமைக்கப்பட வேண்டும், மழையில் மின் கசிவு ஏற்படக்கூடாது.
ஜெனரேட்டர்கள் சரியாக இயங்க வேண்டும். தொழில்நுட்பக் குழுவினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் கேஃபர் உறுதி செய்வார். பெரிய படப்பிடிப்புத் தளங்களில் பாதுகாப்பு என்பது கேஃபரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும்.
ஒளியின் ஆர்க்கிடெக்ட்
ஒளிப்பதிவாளர், ஒரு காட்சியை கற்பனை செய்கிறார். அந்தக் கற்பனையை விளக்குகளாக, நிழல்களாக, ஒளிக்கற்றைகளாக, உணர்வுகளாக மாற்றுவது கேஃபர். நல்ல கேஃபர் இல்லாமல் ஒரு பெரிய ஒளிப்பதிவாளர் முழுமையடைய முடியாது.
காட்சியின் அழகு, தொழில்நுட்பத் தரம், பாதுகாப்பு, வேகம் மற்றும் செயல்திறன் ஆகிய அனைத்துக்கும் கேஃபர் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறார்.
அவர் திரையில் தோன்றுவதில்லை. அவரது பெயர் பெரும்பாலும் பார்வையாளர்களுக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு அழகான ஒளியமைப்பிற்குப் பின்னாலும் அவரது அனுபவமும், உழைப்பும் கலை உணர்வும் மறைந்திருக்கிறது.
(புதன் தோறும் ஒளிகாட்டுவோம்)
- cjrdop@gmail.com