தமிழ் சினிமா

“விஜய்க்கு கதை சொல்லி... சூர்யா என்ட்ரி ஆகி...” - ‘கருப்பு’ உருவான கதை பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி

ஸ்டார்க்கர்

விஜய்யிடம் இருந்து சூர்யாவுக்காக ‘கருப்பு’ படத்தில் நடந்த மாற்றங்கள் குறித்து இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி விவரித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கருப்பு’. தமிழகம் மட்டுமன்றி உலகளவில் மாபெரும் வசூல் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமே ரூ.100 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

‘கருப்பு’ படத்தின் வெற்றிக்காக திரையரங்குகளுக்கு சென்று வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது ஆர்.ஜே.பாலாஜி, “2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘கருப்பு’ படத்தினை எழுதத் தொடங்கினேன். அப்போது கதைக்கான விஷயங்கள் விரிவடைந்து, ஒரு பெரிய ஸ்டார் தேவைப்பட்டது. அப்போது அந்தக் கதையை விஜய் சாரிடம் கூறினேன்.

இந்தக் கதையை உடனடியாக பண்ண முடியுமா என்று விஜய் சார் கேட்டார். அவரும் எனது பாணியில் கலகலப்பான, குடும்பங்கள் ரசிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு படத்தை தேடிக் கொண்டிருந்தார். எனக்கு இந்தக் கதையை முடிக்க சிறிது காலம் தேவை என்றேன். அந்த நேரத்தில் அவரும் அரசியலில் அடியெடுத்து வைத்துவிட்டார். ஆனாலும், நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன். ஏனென்றால் அவருடைய உரையாடலில் எனது கதைக்கு திரைக்கதையில் பல்வேறு விஷயங்கள் கிடைத்தது.

அந்தச் சமயத்தில்தான் இந்தக் கதையை சூர்யா சாரிடம் கூறினேன். அதுவே ‘கருப்பு’ படமாக உருவானது. சூர்யா சாருக்காக கதையில் ‘சிங்கம்’ மற்றும் வாட்டர் மெலன் காட்சிகள் உள்ளிட்டவற்றை மாற்றினேன். ஏனென்றால் அதெல்லாம் சூர்யா சாரால் மட்டுமே செய்ய முடியும். தற்போது 2-ம் பாகம் உருவாகும் என்பது போல் முடித்துள்ளேன். ஆகவே, 2-ம் பாகம் உருவாகும்” என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT