தமிழ் சினிமா

‘ஜனநாயகன்’ பட தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

செய்திப்பிரிவு

தவெக தலை​வ​ரான நடிகர் விஜய் நடித்​துள்ள கடைசி படம் ‘ஜனநாயகன்’. கேவிஎன் புரடெக் ஷன்ஸ் தயாரித்​துள்ள இப்படத்தை ஹெச்​.​வினோத் இயக்​கி​யுள்​ளார். இதை ஜன.9-ம் தேதி வெளி​யிட திட்​ட​மிட்​டிருந்​தனர்.

ஆனால், படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுத்த மத்​திய தணிக்கை வாரி​யம், படத்தை மறுஆய்​வுக்கு அனுப்​பியது. இதை எதிர்த்து படத் தயாரிப்பு குழு தரப்​பில் உயர் நீதி​மன்றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜன​நாயகன்’ படத்தை மறுஆய்வு குழு​வுக்கு பரிந்​துரை செய்த தணிக்கை வாரிய தலை​வர் உத்​தரவை ரத்து செய்​தார்.

இந்த உத்​தரவை எதிர்த்து தணிக்கை வாரி​யத்தின் சார்​பில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலை​மையி​லான அமர்​வு, தனி நீதிபதி அளித்த தீர்ப்​புக்கு தடை விதித்து மேல்​முறை​யீட்டு வழக்கை ஜன. 20-ம் தேதிக்கு தள்ளி வைத்​தது. அத்​துடன், பதில் மனு தாக்​கல் செய்ய தயாரிப்பு நிறு​வனத்​துக்​கும் உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறு​வனம் சார்​பில் வழக்​கறிஞர் இ.சி.அகர்​வாலா உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் தீபாங்​கர் தத்​தா, ஏ.ஜி.​மாசி ஆகியோர் அடங்​கிய அமர்வு ஜன.15-ல் விசா​ரித்​தது.

தயாரிப்பு நிறு​வனம் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் முகுல் ரோத்​தகி ஆஜராகி, தணிக்கை வாரி​யத்​தின் சான்று கிடைப்​ப​தற்கு முன்பே படம் வெளி​யாகும் தேதியை அறிவிப்​பது திரைப்​படத் துறை​யில் வழக்​கம் என்று வாதிட்டார்.

அப்​போது நீதிப​தி​கள், “இந்த விவ​காரத்​தில் தாக்​கல் செய்த மனுவை ஒரே நாளில் விசா​ரித்து உத்​தர​விட்​டதை போல, அனைத்து நீதிப​தி​களும் அனைத்து வழக்​கு​களை​யும் ஓரிரு நாட்களுக்​குள் விசா​ரித்து தீர்ப்பு கூறி​னால் வரவேற்போம். இந்த விவ​காரத்​தில் 6-ம் தேதி தாக்​கல் செய்த மனுவை மின்​னல் வேகத்தில் 7-ம் தேதி விசா​ரித்து உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

தணிக்கை வாரி​யத் தலை​வர் மறு ஆய்வு குழு​வுக்கு அனுப்பி வைத்த 6-ம் தேதியிட்ட உத்தரவை எதிர்த்து மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்ய​வில்​லை” என்​றனர்.

இதற்கு மூத்த வழக்​கறிஞர் முகுல் ரோத்​தகி, “மறு ஆய்வு குழு பரிசீலனைக்கு திரைப்​படம் அனுப்பி வைக்கப்பட்டுள்​ள​தாக மத்​திய தணிக்கை வாரி​யத்​திடம் இருந்து ஜன.5-ம் தேதி கிடைத்த கடிதத்தை எதிர்த்து வழக்கு தொடரப்​பட்​டது. இதே தகவலை மத்திய தணிக்கை வாரி​யத் தலை​வர் ஜன. 6-ம் தேதி தெரி​வித்​தார். ஜன. 5-ம் தேதி​யிட்ட உத்​தர​வுக்கு எதி​ராக வழக்கு தொடரப்பட்​டது. மத்​திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்​தரவு இந்த விவகாரத்​தில் கெட்ட நோக்கத்​துடன் உள்​ளது. திரைப்​படம் உரிய நேரத்​தில் திரை​யிடப்​ப​டா​விட்​டால் அழுகிப் போன பொருளை போன்று நஷ்டம் ஏற்​பட்டு விடும்” என்று வாதிட்​டார்.

அப்​போது நீதிப​தி​கள், சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிபதி சுட்​டிக் காட்​டி​யுள்ள முன்​னு​தா​ரணம் அரசு பணி தொடர்​புடையது. அந்த கருத்து இந்த விவ​காரத்​துக்​குப் பொருந்​தாது. சென்னை உயர் நீதிமன்ற நீதிப​தி​கள் அடங்கிய அமர்வை நாடுங்​கள். ஜன 20-ம் தேதியே இந்த விவ​காரத்தை கூடு​மான வரை வி​சா​ரித்து அன்றே உத்தரவு பிறப்​பிக்க சென்னை உயர் நீதி​மன்​றம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறி மேல்​முறை​யீட்டு மனுவை முடித்​து வைத்தனர். இந்​த வழக்​கில்​ தலை​யிட விரும்​ப​வில்​லை என்​றும்​ நீதிப​திகள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT