தமிழ் சினிமா

‘பாட்ஷா’, ‘பேட்ட’ 2-ம் பாகம் உருவாகாதது ஏன்? - ரஜினி பகிர்ந்த ‘ஜெயிலர் 2’ அனுபவம்

ப்ரியா

”ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை பண்ணலாம் எனச் சொன்ன போது நெல்சன் முதலில் அதை மறுத்தார்” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயிலர் 2’, சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கும் இந்தப் படம் அக்டோபர் 15 அன்று வெளியாக இருக்கிறது. படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அதன் நடிகர்கள், படக்குழுவினர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்று  ‘ஜெயிலர் 2 சூப்பர் ஷோ’ என்ற பெயரில் ஒளிபரப்பானது. அதில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க சம்மதித்த காரணம் குறித்தும், படம் உருவான விதம் குறித்தும் ரஜினி பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், “பொதுவா இன்டோர் ஸ்டேடியத்துல ஆடியோ லாஞ்ச் பண்ணுறதுதான் வழக்கம். அதைக் கொஞ்சம் மாற்றி, இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சிக்கு தயாரிப்பு நிறுவனமே ஏற்பாடு பண்ணி இருக்கு. இதுவும் நல்லாதான் இருக்கு ஆனா, ரசிகர்களை பார்க்க முடியலைங்கிற வருத்தம் எனக்கும் இருக்கு. எதிர்காலத்துல அதை சரி பண்ணிக்கலாம்.

இப்போ ‘ஜெயிலர் 2’. பொதுவா நான் இந்த சீக்வலை எல்லாம் உற்சாகப்படுத்துறது இல்லை. ஏன்னா இரண்டாம் பாகம்ன்னாலே சரக்கு குறைஞ்சு போச்சு, கிரியேட்டிவிட்டி குறைஞ்சு போச்சு, ஏற்கெனவே பண்ணுன விஷயத்துல கொஞ்சம் உப்பு, காரம் போட்டு மறுபடியும் பண்ணுறாங்க அப்படின்னு எனக்கு ஓர் எண்ணம். அதனாலதான் ‘பாட்ஷா’ படத்தோட இரண்டாம் பாகத்துக்கு நிறைய முறை தயாரிப்பு நிறுவனத்துல இருந்து கேட்டாங்க.

என்னதான் மாணிக் பாட்ஷா திருந்தி ஆட்டோ டிரைவர் மாணிக்கமா வாழ நினைச்சாலும் அவருக்கு எதிரான கேங்ஸ்டர்ஸ், போலீஸ் அவரை நிம்மதியா வாழ விட மாட்டாங்க. அதை வச்சு கதை பண்ணலாம்னு சொன்னங்க.

அதேமாதிரி ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இரண்டாம் பாகத்துக்கு நல்ல ஐடியா பண்ணிக்கொண்டு வந்திருந்தாங்க. ‘பேட்ட’யில  விஜய் சேதுபதியோட ஜீவா கதாபாத்திரம், பழிவாங்குற மாதிரி நல்லா பண்ணிக் கொண்டு வந்திருந்தாங்க. ஆனா, எனக்கு இரண்டாம் பாகம் பண்ணுறதுல பெருசா விருப்பம் இல்ல.

ஆனா ஜெயிலர் படம் எல்லாம் முடிஞ்சு ரிலீசாகி, ஓடிடியில வந்ததுக்கு அப்புறமா அந்தப் படத்தைப் பார்க்கும் போது, நெல்சன் 4, 5 இடத்துல வர்மா தொடர்புல இருந்த இண்டர்நேஷனல் கேங்க பத்திச் சொல்லி இருப்பார்.

வர்மா சாகும் போதும் என்னைக் கொன்னா அவங்க உன்னை சும்மா விட மாட்டாங்கன்னு வேற சொல்லி இருப்பார். இதுபோக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உள்ள 3 கண்டெய்னர் ஜெயிலர் கிட்ட இருக்கு. அந்த கேங்க் எப்படி இவரை சும்மா விடுவாங்க. இந்த ஜெயிலர் கதாபாத்திரத்தையும் நெல்சன் பிரமாதமா உருவாக்கி இருந்தார். அரசாங்கம், கைதிகள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு உள்ளவர் அவர்.  இது நல்லா இருக்கே இதை பண்ணலாமேன்னு யோசிச்சேன்.

இன்னொரு முக்கியமான விஷயம், இப்போ நமக்கு 70+ அதுக்கு ஏத்த மாதிரி கதாபாத்திரங்கள் பண்ணனும். சரின்னு நான் நெல்சனை அழைத்தேன். இதுக்கு இடையில் ‘ஜெயிலர்’ ரிலீஸ் ஆனதும் அவருக்கு  எல்லா மொழியிலயும் பயங்கர டிமாண்ட். இவர் என்ன தொகை கேட்டாலும் கொடுக்க தயாரா இருந்தாங்க. அவர் ஒரு பெரிய நடிகரோட படத்தை ஒத்துக்கொண்டும் இருந்தார்.

அவர் ரொம்ப புத்திசாலி. நான் அவரைக் கூப்பிடு  ‘ஜெயிலர் 2’ யோசனையை சொன்னபோது, ‘இல்ல வேணாம் சார்.. இது சரி வராது... ஏற்கெனவே நாம அதை புழிஞ்சு எடுத்துட்டோம். வேணாம் சார்.. அது நல்லா இருக்காது’ அப்படினு சொல்லிட்டார். நானும் சரி ஓகேன்னு சொல்லிட்டு  ‘வேட்டையன்’ அப்படின்னு என் வேலைகளை  பார்க்க வந்துட்டேன்.

அப்புறம் ஒரு மாசம் கழிச்சு எனக்கு போன் பண்ணி ‘சார் எங்க இருக்கீங்க’ன்னு நெல்சன் கேட்டார். நான் அப்போ கேரளாவுல சூட்டிங்ல இருந்தேன். மீட் பண்ணனும்னு சொன்னார். நானும் மீட் பண்ணினேன். அப்போ ‘ஜெயிலர் 2’ பண்ணலாம் சார். நல்லாதான் இருக்கும் அப்படினு சொன்னார். ‘அப்போ அந்த தெலுங்கு படம்’ன்னு நான் கேட்டேன். நான் சொல்லிக்கிறேன் சார்ன்னு சொன்னார்.

என்னப்பா எனக்கு ‘வேட்டையன்’, ‘லால் சலாம்’, ‘கூலி’ படம் எல்லாம் இருக்கேன்னு சொன்னேன். பரவாயில்ல சார். எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்கன்னு சொல்லி, நல்லா டைம் எடுத்து அவர் செதுக்கி  இருக்கிற படம் தான் நீங்க பார்க்கப் போற ‘ஜெயிலர் 2’. இந்தப் படத்துக்காக நெல்சன் அவ்வளவு உழைச்சுருக்கார்.

படத்துல நடிச்சவங்க எல்லாம் ரொம்ப அருமையா நடிச்சிருக்காங்க. படத்தைப் பற்றி அதிகமா சொல்லக் கூடாது.

‘ஜெயிலர் 2’ல எல்லாமே இருக்கு ஒரு விஷயம் மிஸ்ஸிங், அது தமன்னாதான். இரண்டு பாட்டுல ஒரு பாட்டுக்கு தமன்னாவை வைச்சுக்கலாம்னு நெல்சன்கிட்ட சொன்னேன். ‘சார் உங்களுக்கு பிடிக்கும்னு எல்லாம் பாட்டுல வைச்சுக்க முடியாது சார்’ அப்படின்னு சொல்லிட்டார்.

எனக்கு பிடிக்கும்னு இல்ல சார், ஜனங்களுக்கு பிடிக்கும்னு  நான் சொன்னேன். எனக்கு பிடிச்ச விஷயத்தை செய்யணுன்னா 45 வருஷத்துக்கு முன்னாலயே பெங்களூரு போயிருப்பேன். ஜனங்களுக்கு பிடிச்சதாலதான் இங்கே நின்னுட்டு இருக்கேன்னு சொன்னேன்.

ஆனாலும் இந்தப் படத்தைப் ஒவ்வொரு விஷயமா பார்த்து பார்த்து செதுக்கி இருக்காங்க. படம் நல்லா போகணும்னு நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன். இந்த வயசுலயும் கதாநாயகனா எப்படி நடிக்கிறீங்கன்னு நிறையபேர் கேக்குறாங்க. எல்லாத்துக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்கள், தமிழ் மக்கள்தான் காரணம்” என்று ரஜினி பேசினார்.

இந்தப் படத்தில் ரஜினியுடன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ், வித்யாபாலன் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர்.

அனிருத் இசையமைத்திருக்கு படத்துக்கு, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், ஆர்.நிர்மல் படத்தொகுப்பு பணியையும் மேற்கொண்டுள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 15 அன்று திரையரங்கில் வெளியாகிறது.

SCROLL FOR NEXT