ரஜினியின் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் நடிகர்கள், படக்குழுவினர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி, அக்டோபர் 9 அன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயிலர் 2’. இந்தப் படம் அக்டோபர் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் நடிகர்கள், படக்குழுவினர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதில் ரஜினிகாந்த் உடன் படத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ. ‘ஜெயிலர் 2’ சூப்பர் ஷோவுக்கு தயாராகுங்கள். அக்டோபர் 9 முதல் சன் நெக்ஸ்டில் மட்டும்’ எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, படத்தின் ட்ரெய்லரை படக்குழு திங்கள்கிழமை வெளியிட்டிருந்தது. கடந்த 2023-ம் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாக வரும் இந்த இரண்டாம் பாகத்தில் மகனின் மறைவுக்கு பிறகு தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஓட்டுநராக வாழும் டைகர் முத்துவேல் பாண்டியன், கல்பக்ஸ் என்கிற கடத்தல் கும்பலை தேடிக் கண்டுபிடித்து, தன் பாணியில் வேட்டையாடும் அதகளம் ட்ரெய்லரில் காட்டப்பட்டிருந்தது.
நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினியுடன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிவராஜ்குமார், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.