தமிழ் சினிமா

நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதப்பட்டதா? - ரஜினிகாந்த் விளக்கம்

ப்ரியா

கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய இந்தப் படம் 1999-ம் வெளியானது. இதில் ரஜினியுடன் இணைந்து சிவாஜிகணேசன் நடித்திருந்தார். சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ் என பலர் நடித்தனர். அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.சத்திய நாராயணா, எம்.வி கிருஷ்ணா ராவ், கே விட்டல் பிரசாத் ஆகியோர் தயாரித்தனர். இணை தயாரிப்பாளராக பி.எல்.தேனப்பன் பணியாற்றினார்.

அன்றைய காலகட்டத்தில் 200 திரையரங்குகளில் வெளியாகி 150 நாட்களைக் கடந்து ஓடியது இப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, நவீன ஒலி அமைப்புடன் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிச.12ம் தேதி மீண்டும் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் உருவாக்கம் குறித்து ரஜினிகாந்த் பேசும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை ரஜினி தெரிவித்துள்ளார்.

அதில் பேசிய ரஜினிகாந்த், “எனக்கு நீலாம்பரி கதாபாத்திரத்தை நினைக்கும்போதெல்லாம் ஐஸ்வர்யா ராய்தான் நினைவில் வரும். இதற்கு அவர்தான் சரியாக இருப்பார் என்று நான் முடிவெடுத்தேன். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கால்ஷீட்டுக்காக அவர் பின்னாலேயே சுற்றினோம். அதன் பிறகு அவருக்கு அதில் இஷ்டம் இல்லை என்று தெரிந்தது.

அதன்பிறகு ஸ்ரீதேவி, மீனா, மாதுரி தீக்‌ஷித் என்றெல்லாம் பேச்சு வந்தது. அதன் பிறகு ஒருநாள் ரவிக்குமார் எனக்கு போன் செய்து ஒரு பெயர் சொல்கிறேன். உங்களுக்கு சம்மதம் என்றால் ஓகே. இல்லையென்றால் விட்டுவிடுங்கள். அது ரம்யா கிருஷ்ணன் என்றார். போட்டோ அனுப்பினார். எனக்கு என்னடா இது என்று இருந்தது. அவர் எடை போட்டதும் நீங்கள் பாருங்கள் சார் என்றார். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் செய்யுங்கள் என்றேன்.

படம் ரிலீஸ் ஆகி ஓடிக் கொண்டிருந்தபோது, 96, 97 காலகட்டத்தில் நான் ஜெயலலிதாவை எதிர்த்ததை வைத்து நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதப்பட்டது என்ற ஒரு புரளி கிளம்பியது. படம் ரிலீஸ் ஆனபிறகு அதை ஜெயலலிதா பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். போயஸ் கார்டனுக்கு ரீல் எல்லாம் கொடுத்து விட்டோம். அவரும் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக பாராட்டினார் என்று நான் கேள்விப்பட்டேன்” இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT