வெங்கட் பிரபு கதையில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
ஆர்ப்பரிக்கும் பெரும் கடல் அலை ஓசையுடன் தொடங்குகிறது 1.34 நிமிடங்கள் ஓடும் இந்த டீசர். இளையராஜா பாடல் கேட்டால் டைம் ட்ராவல் பண்ண முடியுமா என ஒருவன் கேட்க, வாக்மேனில் ஒருவன் இளையராஜா பாடல் கேட்கிறான். அது பாடல் கேட்டவனை, அவன் வாழ்வில் பின்னோக்கி இழுத்துப் போகிறது. கருப்பு வெள்ளையில் கவிதையாய் விரியும் காட்சிகளில் பாடல் கேட்டவனின் சுகமான நினைவுகளும், துயரமும் அவனைத் துரத்துகிறது.
‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரமணன் பாலகங்காதரன் தயாரிக்கும் இந்தப் படத்தை குடும்பஸ்தன் படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என் சுப்ரமணியம் இயக்குகிறார். படத்தின் கதையை வெங்கட் பிரபு எழுத, சுதா கொங்கரா க்ரியேட்டிவ் புரொடியுஸராக பணியாற்றுகிறார்.
இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரனின் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில், சோனா ஒலிக்கல் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜூ, பிபியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.