ஸ்ரீமதுராஜா தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம், ‘புகார்’. இதை ‘ரூட்’ படத்தை இயக்கிய ஏ.சி.மணிகண்டன் இயக்குகிறார். கதாநாயகியாக ரஷ்மிதா நடிக்கிறார். 2-வது ஹீரோவாக ராஜ்கிரண் நடிக்கிறார். ஜனுஷ்கா, மணி செல்வம் உள்பட பலர் நடிக்கின்றனர். க்ரைம் த்ரில்லராக இந்த படம் உருவாகிறது. பிச்சைக்கனி, ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் பிரபு இசையமைக்கிறார்.
“இன்றைய சூழலில் காதலால் பல ஆணவக் கொலைகள் அரங்கேறுகின்றன. அந்தக் குடும்பங்கள் சந்திக்கும் வலி, அதன்பிறகு அந்த குடும்பங்களின் நிலைமை என்ன ஆகிறது என்பது பற்றியும் காதலால் ஏற்படும் கொலைகளைத் தடுப்பதற்கு வழி சொல்லும் விதமாகவும் இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது” என்றது படக்குழு. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.