

அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் ‘இந்தியாவின் மாற்றத்துக்கான அணுசக்தி மேம்பாடு - நிலைத்த பயன்பாடு’ (SHANTI) மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது பெரும் விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது. உலக அளவில் அணு மின்சக்தி உற்பத்தியில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது.
தற்போது நாட்டில் அணுசக்தித் துறையின் மின் உற்பத்தித் திறன் 8.78 ஜிகாவாட்டாக உள்ளது. இதனை 2047க்குள் 100 ஜிகாவாட்டாக அதிகரிக்கும்நோக்கில் சாந்தி மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. மின்னணுத் தொழில்நுட்பப் பயன்பாடு, நகர விரிவாக்கம், மின் வாகனப் பெருக்கம், வானிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் நாள்தோறும் மின்சாரத் தேவை அதிகரித்துவருகிறது.
2023-24 நிதியாண்டில் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை சுமார் 1,600 பில்லியன் யூனிட்டுகள் இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2025 செப்டம்பர் மாதம் நாட்டின் நிறுவப்பட்ட மின்திறன் 500.89 ஜிகாவாட்டை எட்டியது.