ஜாய் மேத்யூ, வைசாக் ரவி, நேஹா சாவ்லா, சாக் ஷி பாதலா, சிந்து வர்மா, கிரண் ராஜ், கண்ணன் சாகர் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘அரூபி’.
ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்துக்குக் கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். ஆமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை புணர்த்தம் புரொடக் ஷன் சார்பாக பிரதீப் ராஜ் தயாரித்துள்ளார். அபிலாஷ் வாரியார் இயக்கியுள்ளார். மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்புக்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் பேசும்போது, “என் நண்பரும், இந்தப் படத்தின் நாயகனுமான விஷாக் ரவியுடன் சேர்ந்து இயக்குநர் என்னிடம் இந்தக் கதையைச் சொன்னார். நான் சினிமா துறையைச் சேர்ந்தவன் அல்ல. ஆனால் கதையைக் கேட்டதும் பிடித்தது. என் மனைவி மஞ்சுவின் ஆசீர்வாதத்துடன் இந்தப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன். அப்போது அபிலாஷிடம் ஒரு விஷயம் மட்டும் சொன்னேன்.
திறமையான இளம் கலைஞர்களைத் தேடி வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றேன். அதன்படி செய்தார். இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கதைதான். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு மக்கள் பேசுவார்கள், விவாதிப்பார்கள், தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதற்காகவே காத்திருக்கிறேன்” என்றார். ஜூலை 3ம் தேதி இப்படம் தமிழ், மலையாளத்தில் வெளி வருகிறது.