சென்னை: வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் கடிதம் எழுதியிருக்கிறது.
சமீபத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவில் வருவாய் பகிர்வு முறையில் வரும் நடிகர்களின் படங்களை மட்டுமே தயாரிப்பது என முடிவுச் செய்யப்பட்டது. இதனை அனைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் மே 2-ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.
தற்போது நடிகர் சங்கத்தின் கடிதத்திற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பதிலடிக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் திரையுலகின் நலன் கருதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியோர் இணைந்து திரைத்துறை மறுசீரமைப்பு என்று கடந்த 2024-ம் பருடம் ஆகஸ்ட் மாதம் துவங்கினோம்.
அதில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உள்ள முன்னண்னி தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்பட வேண்டும், பொதுவான விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது.
அவ்வகையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மறுசீரமைப்பு கோரிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 18.08.2024 அன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் 11-வது பத்தியில் தெளிவாக, முன்னணி நடிகர்கள் மற்ற மாநிலங்களை போலவே வருவாய் பகிர்வு முறையில் நடிக்க வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம். மேலும், 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் முதலே தங்களுக்கு தெரிவித்து வருகிறோம்.
அதற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் முடிவெடுக்க முடியாது, செயற்குழுவில் கலந்து பேச வேண்டும் என்றும், முன்னணி நடிகர்களுடன் ஒரு கலந்துரையாடல் மீட்டிங் நடத்தி அதன் பின்னர் நாங்கள் முறையாக தெரிவிக்கின்றோம் என்று நடிகர் சங்க தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் கூறினார்கள்.
அதன் பின்னர், கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடிகர்கள் சிம்பு, தனுஷ் மற்றும் சில நடிகர்களின் பிரச்சனைகள் குறித்து நமது இரு அமைப்புகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை சம்பந்தமாக தனுஷ் மற்றும் சில நடிகர்களின் பிரச்சனைகள் இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
அப்படி பேச்சுவார்த்தை நடக்கும் போது கூட வருவாய் பகிர்வு பற்றி கூறினோம். அப்பொழுதும் தங்களது சங்க நிர்வாகிகள் முடிவெடுக்க முடியாது. அதனால் நாங்கள் முன்னணி நடிகர்களை அழைத்து பேசி முடிவெடுத்து கூறுகிறோம் என்று சொன்னீர்கள்.
அதன் பின்னர் ஒருவருடம் தங்களிடம் இருந்து எந்தவிதமான பதிலும் வராமல் இருந்தாலும், தொடர்ந்து எங்களது சங்கத்தின் பொதுக்குழு தீர்மானத்தினை ஏற்க மறுத்து வருவதாலும், கடந்த 09-11-25 அன்று நடைபெற்ற எங்களது பொதுக்குழுவில் மேற்படி நடிகர்கள் வருவாய் பகிர்வு முறையில் நடிக்க வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தங்களுக்கு நேரடியாகவும், ஊடகங்கள் மற்றும் பத்திரிகை வாயிலாக அனைத்து திரைத்துறையினருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.
இவ்வாறு 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை முன்னணி நடிகர்கள் வருவாய் பகிர்வு முறையில் நடிக்க வரவேண்டும் என்று தெரியப்படுத்தியும், தென்னிந்திய நடிகர் சங்கம் எந்தவிதமான முடிவும் அறிவிக்காமல் இருந்து வருகிறது என்பதை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தெரியப்படுத்தும் நோக்கில் தற்போது புதியதாக பதவியேற்ற நிர்வாகம் நடத்திய பொதுக்குழுவிலும் வருவாய் பகிர்வு முறை குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதனை நடிகர் சங்கத்திற்கு தெரியப்படுத்தவில்லை என்று கூறுவது எங்களுக்கு மிகவும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு முறையும் நமது இரு அமைப்பும் பேச்சுவார்த்தை நடத்த முன்னெடுக்கும் போது வாய்மொழியாக எங்கள் தரப்பிலிருந்து இந்த விஷயத்தினை நடிகர் சங்கத் தலைவர், துணைத்தலைவர்கள், பொருளாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால், தாங்கள் ஊடகங்களில் உண்மைக்கு புறம்பாக எதுவுமே தெரியாது என்று தெரிவித்துள்ளது ஏற்புடையதல்ல என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அவ்வகையில் கடந்த மூன்று வருட காலமாக நடிகர்கள் வருவாய் பகிர்வு முறையில், தாங்கள் எந்தவிதமான முடிவும் எடுக்காத காரணத்தினாலும், எங்கள் பரிந்துரைக்கு ஒத்துழைக்காத காரணத்தினாலும், தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்றும் தெரிந்திருந்தும் நாங்கள் அடையாள வேலைநிறுத்தம் என்று முடிவெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
எனவே, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தாங்கள் உடனடியாக பேச்சுவார்த்தைக்கும் வரும் பட்சத்தில், எங்களது பொதுக்குழுவின் தீர்மானமான அடையாள வேலைநிறுத்தத்தினை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு வராமல் புறக்கணிக்கும் பட்சத்தில் எங்களது அடையாள வேலைநிறுத்தம் என்பது தொடரும் என்பதை தங்களுக்கு இந்த கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.