

‘3 இடியட்ஸ்’ படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதை பேட்டியொன்றில் உறுதி செய்திருக்கிறார் நடிகர் ஆமிர்கான்.
ஆமிர்கானின் மகன் ஜுனைத் கான் நடித்துள்ள ‘ஏக் தின்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதில் ‘3 இடியட்ஸ்’ 2-ம் பாகம் உருவாக இருப்பதை உறுதி செய்துள்ளார் ஆமிர்கான். அப்படம் குறித்து ஆமிர்கான், “தற்போது ராஜ்குமார் ஹிரானி ‘3 இடியட்ஸ்’ படத்தின் 2-ம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் கதையினை நான் கேட்டுள்ளேன். அது மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
அப்படத்தின் திரைக்கதை பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. முதல் பாக பாணியிலான நகைச்சுவை இடம்பெற்றுள்ளது. அதே சமயத்தில், இக்கதை மிகவும் வித்தியாசமாகவும் அமைந்துள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் கதையே தான் என்றாலும் அக்கதை 10 ஆண்டுகளுக்கு பிறகு என்ன என்பதை கூறுகிறது. வரும் நாட்களில் அப்படத்தில் நான் நடிக்கவுள்ளேன்.
அந்த அழகான கதையினை அபிஜத் மற்றும் ராஜ்குமார் ஹிரானி இருவரும் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார்கள் என கருதுகிறேன். நானும் Phunsukh Wangdu கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று ஆமிர்கான் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டியின் மூலம் விரைவில் ‘3 இடியட்ஸ்’ 2-ம் பாகம் உருவாகும் என்பது தெளிவாகிறது.